

திருச்சி: கடத்தல் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, நெல் அரைவை மில் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. இவர், திருச்சி விமான நிலையப் பகுதியில் நெல் அரைவை மில் நடத்தி வந்தார்.
கடத்தல் புகார்: இங்கு தங்கி வேலை பார்த்து வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த முனியன் என்பவரை செல்லையா கடத்திச் சென்றுவிட்டதாக முனியனின் மனைவி விமானநிலைய காவல் நிலையத்தில் 1.8.2009 அன்று புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் செல்லையா மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, அப்போது அங்கு காவல் ஆய்வாளராக இருந்த முருகேசன், செல்லையாவிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லையா லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, 11.8.2009 அன்று செல்லையாவிடம் லஞ்சம் வாங்கியபோது முருகேசனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கின் விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் முருகேசன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். முருகேசன் தற்போது திருச்சி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.