

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயிலுக்காக நேற்று முன்தினம் துடியலூர் ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில், அவ்வழியாக சரக்குகளை ஏற்றிய லாரி வந்தது.
அந்த லாரி தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, திடீரென பழுதாகி தண்டவாளத்தில் நின்றுவிட்டது. அப்போது அங்கு வந்துகொண்டிருந்த ரயிலுக்கு கேட் கீப்பர் உடனடியாக சிவப்பு விளக்கை காண்பித்தார். இதையடுத்து, லாரிக்கு 100 மீட்டர் முன்பாக ரயில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக லாரி மீது ரயில் மோதி விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
பொதுமக்கள் லாரியை தண்டவாளத்தில் இருந்து தள்ளி நகர்த்த முற்பட்டனர். ஆனால், லாரியில் சுமார் 30 டன் அளவுக்கு சரக்கு இருந்ததால் ஒரு மணி நேரம் கடந்தும் நகர்த்த முடியவில்லை. இதையடுத்து, லாரியின் பின் பக்கத்தில் இருந்து மற்றொரு டெம்போ மூலம் தள்ளி தண்டவாளத்தில் இருந்து லாரியை பொதுமக்கள் நகர்த்தினர்.
பின்னர், ரயில்வே கேட் மூடப்பட்டு, அங்கு காத்திருந்த பயணிகள் ரயில் ஒரு மணி நேர தாமதத்துக்கு பின் கோவைக்கு வந்தது. இதே ரயில்வே கேட் பகுதியில் ஏற்கெனவே தண்டவாள உயரம் காரணமாக 3 லாரிகள் பழுதாகி நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.