

காட்டாங்கொளத்தூர்: நாம் அனைவரும் கூட்டாக உழைத்தால், இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இதற்காக 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை. இளைஞர்களால் சிறந்த நாடாக இந்தியா திகழும் என எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்கொளத்துரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் வளாகத்தில் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பங்கேற்று 7,125 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
புதிய இந்தியாவை உருவாக்குவது நமது கனவு. ஒவ்வொரு சவாலுக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதில் இந்தியாஉலகை வழிநடத்த வேண்டும் என்பது நமது கனவு. ஒவ்வொரு இலக்கையும் அடைய உறுதியே முக்கியம். இன்று உலகின் முக்கிய நிறுவனங்களில் சிஇஒ பதவி இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுவே நமது திறமையின் அடையாளம். உலகமே இந்திய இளைஞர்கள் மீது நம் பிக்கை வைத்துள்ளது. கடின உழைப்பு மற்றும் புதுமையான யோசனைகள் மூலம் உலகசமூகத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நனவாக்க வேண்டும். இந்தியா விரைவில் வளர்ந்த நாடாக மாறும் என்று நம்புகிறேன்.
இந்த கனவை நிறைவேற்றப் போவது நமது இளைஞர்களே தவிர வேறு யாருமல்ல என்று நமது பிரதமர் கூறினார். மாணவர்கள் பெற்ற இந்த பட்டம் உங்களுக்கு ஒரு மைல்கல். உங்கள் வாழ்க்கையின் இரண்டாவது மைல்கல்புதிய இந்தியாவை உருவாக்குவது. புதிய இந்தியாவை உருவாக்குவதில் நீங்கள் பங்களிப்பீர்கள், இந்த இலக்கை அடைய நாம் அனைவரும் கூட்டாக உழைத்தால், இந்தியா வளர்ந்த நாடாக மாற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்தியாவில் இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் உலகிலேயே சிறந்தவர்களாக உள்ளனர். இந்த 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது.
சிறந்த வலுவான ஊழல் இல்லாத இந்தியா உருவாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும். பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டங்கள் குறித்து இளைஞர்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். இளைஞர்கள் இதில் பங்கேற்று நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்கள் கண்ட கனவை நனைவாக்க முன்வர வேண்டும். இதுபோன்ற இளைஞர்களால் சிறந்த நாடாக இந்தியா திகழும்.இவ்வாறு அவர் பேசினார்.
பட்டமளிப்பு விழாவில் எஸ்.ஆர்.எம் பல்கலை. வேந்தர் டாக்டர்பாரிவேந்தர் பேசியதாவது: உலக அளவில் கல்வி நிலையங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனமாக எஸ்ஆர்எம் திகழ்கிறது. மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கக் கூடிய தகுதிகளையும் திறமைகளையும் எஸ்ஆர்எம் மாணவர்கள் பெற்று இருப்பதால் ஆண்டுக்குரூ.1 கோடி வரை சம்பளம் பெற்று பணிக்கு செல்கின்றனர். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றை படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறோம். ஜி 20 அமைப்பில் பிற நாடுகளுக்கு வழிகாட்டக் கூடிய தலைமை பொறுப்பில் நம் நாடு அமர்ந்துள்ள நிலையில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வரலாற்றில் ஒரு சிறப்பான ஆண்டுஇது.
மருத்துவ படிப்பில் பட்டம்பெறக்கூடிய மருத்துவ மாணவர்கள் நகரங்களில் சென்று பணியாற்றாமல் கிராமங்களுக்கு சென்றுஏழை எளிய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அதன் மூலம் அவர்கள் தங்களது வாழ்வில் ஒரு திருப்தியான நிலையை அடைய முடியும். மருத்துவம் மட்டுமல்லாது பொறியியல் துறையிலும் பிற துறைசார்ந்த படிப்புகளிலும் எஸ்ஆர்எம் மாணவர்கள் சாதித்து வருகின்றனர். விழாவில் இணைவேந்தர் (கல்வி) சத்தியநாராயணன், துணைவேந்தர் சி.முத்தமிழ்ச் செல்வன்,பதிவாளர் டாக்டர் எஸ். பொன்னுசாமி, இணை துணைவேந்தர் டாக்டர்லெப்டினன்ட் கர்னல் ஏ ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.