திண்டுக்கல் | பாஜக, திமுக கொடிகளை அகற்றிய போலீஸார் - எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வாக்குவாதம்

திண்டுக்கல் | பாஜக, திமுக கொடிகளை அகற்றிய போலீஸார் - எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வாக்குவாதம்
Updated on
1 min read

திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகைதரும் பிரதமர், முதல்வரை வரவேற்க பா.ஜ.க, திமுகவினர் சாலையோரம் நட்ட கொடிக் கம்பங்களை போலீஸார் அகற்றினர். அப்போது, பாஜகவினர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் இன்று நடைபெறும் பல்கலைக்கழகப் பட்டமளிப்புவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரதமரை வரவேற்க பாஜகவினரும், முதல்வரை வரவேற்க திமுகவினரும் காந்திகிராமப் பகுதி நான்குவழிச் சாலையின் இருபுறமும் தங்கள் கட்சிக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்புக் கருதி ஹெலிகாப்டர் இறங்குதளம் அருகே உள்ள சாலைப் பகுதியில் நடப்பட்டிருந்த இரு கட்சிகளின் கொடிகளை அகற்ற போலீஸார் அறிவுறுத்தினர். கட்சியினர் கொடிகளை அகற்றிக் கொள்ளாததால் போலீஸார் கொடிகளை அகற்றினர். இதற்கு பா.ஜ.க, திமுக நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பாஜக கொடியை போலீஸார் அகற்றியபோது போலீஸாருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திண்டுக்கல் எஸ்பி வீ.பாஸ்கரன் பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி இரு கட்சிகளின் கொடிகளும் அகற்றப்படுவதாக நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறினார்.

திமுக நிர்வாகிகள் சென்றுவிட, பாஜகவினர் சிலர் எஸ்பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸாருக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் ஹெலிகாப்டர் தளம் அருகே சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரு கட்சிகளின் கொடிகளையும் போலீஸார் அப்பகுதியில் இருந்து அகற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in