

ஜார்கண்ட் மாநில சிறுமி பிரியங்காவின் மரணத்துக்கு வேலூர் மாநகராட்சி ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாளை இந்த மனு மீது விசாரணை நடைபெற உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித் முகர்ஜி. இவரது இரண்டாவது மகள் ஆர்த்திதாவின் மருத்துவச் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கடந்த மே மாதம் குடும்பத்துடன் வந்தார். ஜூன் 2-ம் தேதி மாலை இந்திரஜித்தின் மூத்த மகள் பிரியங்கா பேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவில் நடந்து சென்றபோது மழை நீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டார். சுமார் 60 மணி நேர தேடுதல் பணிக்குப்பிறகு அவரது சடலம் கிடைத்தது.
இந்த சம்பவத்துக்கு மாநகராட்சியின் அலட்சியபோக்கே காரணம். கால்வாய் ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாமல் இருந்தது, கழிவுநீர் கால்வாய், மழை நீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காதது போன்ற காரணத்தால் மாநகராட்சி இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரியங்காவின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காட்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் இளங்கோவன் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது