

விழுப்புரம்: விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அரசு உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தற்போது விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பள்ளி நிர்வாகம் வரும் 3 நாட்களுக்கு கண்டிப்பாக 1 முதல் 6-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் அனைவரும் டையப்பர் அணிந்து வர வேண்டும் என்று வாட்ஸ் ஆப் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்,
இத்தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இத்தகவல் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உத்தரவின் பேரில், தனியார் பள்ளி களின் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாகவும், வரும் நாட்களில் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பதிவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் விளக்கம் பெற, தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜை தொடர்பு கொண்டபோது, அவர் பேச முன்வரவில்லை.