

திருமங்கலம்: மதுரை - திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை தீவிபத்தில் பெண்கள் உட்பட 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, அமைச்சர் பி. மூர்த்தி ஆறுதல் கூறினார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியிலுள்ள சிந்து பட்டி அருகே உள்ளது அழகுசிறை என்ற கிராமம். இங்கு வெள்ளையன் மனைவி அனுசியா தேவி என்பவருக்கு சொந்தமான விபிஎம் என்ற பெயரில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இத்தொழிற்சாலையில் அழகுசிறை, வடக்கம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இன்று காலை முதலே வழக்கம் போன்று பட்டாசு ஆலை செயல்பட்டது. அங்குள்ள 2 அறைகளிலும் தொழிலாளர்கள் அமர்ந்து பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மதியத்திற்கு மேல் ஒரு அறையில் தீடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், பட்டாசுகள் வெடித்து சிதறின. சிறிது நேரத்தில் பக்கத்து அறைக்கும் தீ பொறி பட்டு வெடிக்க தொடங்கியது. இரு அறையிலும் குவித்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகளும், வெடி மருந்துகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் இரு அறைகளும் இடிந்து தரைமட்டமானது. தொடர்ந்து பட்டாசுகள் எடை போடும் பகுதிக்கும் தீ பரவியதால் அங்கு குவிந்து கிடந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதைக் கண்டு தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இது பற்றி தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சியை தீயை அணைத்தனர். இருப்பினும், பட்டாசு தயாரிக்கும் அறைகளுக்குள் சிக்கிய கலுங்குபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலுசாமி மகன் அம்மாசி (50),வடக்கம்பட்டி சகாதேவன் மகன் வல்லரசு (25), கோபி (25), மாயக்கவுண்டன்பட்டி விக்கி (எ) விக்னேஷ் (25), அழகுசிறையைச் சேர்நத ரெகுபதி கொண்டம்மாள் (30) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது அடையாளம் தெரிந்தது.
கட்டிட இடுபாடுகளில் சிக்கிய உடல்களை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பட்டாசு வெடித்து சிதறிய போது, எடை போடும், பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் படுகாயம் அடைந்தது தெரிய வந்தது. அவர்கள் மீட்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் மேல் சிகிச்சைக்கென மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பட்டாசு வெடி விபத்து பற்றி அறிந்த மதுரை சரக டிஐஜி ஆர். பொன்னி, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சிவபிரசாத், திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகண்ணன், உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்தில் சிக்கி காய மடைந்தவர்களை உடனே மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். பட்டாசுகள் தயாரித்து குவித்து வைக்கப்பட்டபோது, உராய்வில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இவ்விபத்து குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் அனுசியா தேவியிடம் சிந்துபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதனிடையே, அமைச்சர் பி. மூர்த்தி அழகுசிறை கிராமத்திற்கு விரைந்தார். அவர் பட்டாசு விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தார். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் கூறினார். காயமடைந்த வர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களின் உயிரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
முன்னள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் எம்எல்ஏ உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தினர். மதுரையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை: டிஐஜி ஆர்.பொன்னி கூறுகையில், ‘‘இந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்து இருப்பது தெரிந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கிறோம். சிறிய அறைகளில் வைத்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தொழிலாளர்கள் பட்டாசுகளை கையால் தயாரிக்கும்போது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது விபத்துக்கு வேறு காரணம் ஏதுவும் உண்டா என்ற பல கோணத்தில் விசாரிக்கிறோம். இதனிடையே பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.