கேரளா - தமிழக எல்லைப் பகுதியில் டிஜிட்டல் நில அளவை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை: தமிழக அரசு விளக்கம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழக - கேரள எல்லைப் பகுதியில் எந்தவித டிஜிட்டல் நில அளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து வருவாய்த் துறை செயலர் வெளியிட்டுள்ள விளக்க செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறுநிலஅளவை பணியினை நவம்பர் 1-ம் தேதி முதல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்பொருள் குறித்து ஏற்கெனவே கடந்த 09-11-2022 அன்று வருவாய்த் துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள். இருப்பினும், மீண்டும் இது குறித்து இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.

கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநர் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பொது எல்லையில் அமையப்பெற்ற கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன் சோலை வட்டத்தினை சார்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம், சாந்தான்பாறை ஆகிய கிராமங்களில் டிஜிட்டல் நில அளவை பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுளதாகவும், அந்த கிராமங்களின் இரு மாநில பொது எல்லைகள் தேனி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளதால் அது தொடர்பான பழைய பதிவேடுகளில் உள்ள பழைய அளவுகளை சரிபார்த்திட கூட்டம் நடத்துவதற்கு தேனி மாவட்டம் நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், மாநில எல்லைகள் தொடர்புடைய பதிவேடுகளை தயார் நிலையில் வைத்துக்கொண்டு கூட்டு ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு உரிய தேதி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க கோரப்பட்டிருந்தது. மேற்குறிப்பிட்ட விவரப்படி தொடர்புடைய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு தேதியினை முடிவு செய்து தகவலினை கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநருக்கு கடித வரைவு மூலம் தெரிவிக்கவும், அந்த கூட்டு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும்.

இது தொடர்பாக தமிழக - கேரள இருமாநில பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நிலஅளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும், தமிழக வனச்சரகர்களை இரு மாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நிலஅளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்திட தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in