Published : 10 Nov 2022 04:19 AM
Last Updated : 10 Nov 2022 04:19 AM

வரைவுப் பட்டியல் வெளியீடு | தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் - பட்டியலில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம்

சென்னை சாந்தோமில் வாக்காளர் விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணியை நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு. படம்: பு,க.பிரவீன்

சென்னை: தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஏறத்தாழ 6.18 கோடி வாக்காளர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நேற்று முதல் தொடங்கின. இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியலை சென்னையில் மாநகராட்சி ஆணையரும், இதர மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் வெளியிட்டனர்.

இதையொட்டி, மக்களின் தேர்தல் பங்களிப்பு தொடர்பான விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணியை, சென்னை சாந்தோமில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவ. 9-ல் (நேற்று) தொடங்கி டிச. 8-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

தமிழகத்தில் தற்போது, 6,18,26,182 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3,03,95,103 பேர், பெண்கள் 3,14,23,321 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,758 பேர்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,66,464 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகத்தில் 1,72,211 வாக்காளர்களும் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வரும் 12 ,13, 26, 27-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பு ஆகியவற்றுக்கான படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். இதுதவிர, அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் படிவங்களை அளிக்கலாம்.

பெயர் சேர்ப்பதற்கு முகவரி மற்றும் வயதுக்கான சான்றாக ஆதார் அளிக்கலாம். ஆதார் இல்லாவிட்டால், முகவரி, வயதுக்கான உறுதி ஆவணமாக 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். வரும் ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயர் சேர்க்கலாம் என்றிருந்த நிலையில், தற்போது 17 வயது பூர்த்தியானவர்கள் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆனால், 18 வயது பூர்த்தி அடைந்ததும்தான் பெயர் சேர்க்கப்படும். மேலும், 25 வயதுக்கு குறைந்த வாக்காளர்கள், வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டும்.

படிவங்கள் என்ன?

இதுதவிர, www.nvsp.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் “VOTER HELP LINE" கைபேசி செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டவர் பெயர் சேர்க்க 6-ஏ, ஆதார் இணைக்க 6-பி, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7 சமர்ப்பிக்க வேண்டும். விலாசம் மாறுதல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வாக்காளர் பட்டியலுடன் இதுவரை 56.19 சதவீதம், அதாவது 3.46 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 83 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 20.42 சதவீதத்தினர் மட்டுமே விவரங்களை அளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது 6.28 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. அப்போது, பெயர் சேர்த்தலுக்கு 9.44 லட்சம் விண்ணப்பங்கள் உள்பட 14.27 லட்சம் விண்ணப்பங்கள் பெறப் பட்டு, பரிசீலிக்கப்பட்டன.

இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இடைப்பட்ட காலத்தில், பட்டியலில் இரட்டைப் பதிவுகள் நீக்கம் உள்ளிட்டவை காரணமாக, தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 18 லட்சம் குறைந்துள்ளது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x