

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க பறக்கும் படைகளை அமைத்து சோதனை நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகளை காலாவதி ஆகச்செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட மருந்து ஸ்டோர் பொறுப்பாளரான முத்துமாலை ராணி, தனக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி, அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் காலாவதியாகாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் காலாவதியாவதை தடுக்க கொள்முதல் முதல் விநியோகம் வரை பல்வேறு கண்காணிப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 6 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. தேவைக்கு அதிகமான மருந்துகள் இருப்பில் இருந்தால்அவற்றை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாவிட்டால் புகார் செய்வதற்கு ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி எண் 104 வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் புகார் பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ‘தமிழக அரசு’ என்றும், ‘இவை விற்பனைக்கு அல்ல’ என்றும் அச்சிடப்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளுக்கு கடத்த வாய்ப்பில்லை. மேலும், காலாவதியான மருந்துகளை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் உள்ள மருந்துகளை தனியாருக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்தால், அதுதொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகளை நடத்த வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் மட்டுமே உள்ளதாக தெரிவித்த நீதிபதி, மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நேரங்களில் பணியில் இருப்பதை உறுதிசெய்ய பயோ-மெட்ரிக்வருகைப் பதிவேடு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்து, விசாரணையை வரும் 11-ம் தேதிக்குதள்ளி வைத்துள்ளார்.