

சென்னை: மறு அளவீடு செய்வதாக தமிழகத்துக்கு சொந்தமான நிலங்களை கேரள அரசு ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: நாராயணன் திருப்பதி: தமிழக - கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக தன்னிச்சையாக கேரளஅரசு செயல்பட்டு தமிழக மக்களின் நிலங்களை தங்களின் வருவாய் நிலங்கள் என ஆக்கிரமித்து வருவது கண்டிக்கத்தக்கது. பல லட்சம் ஏக்கர் நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி வளைத்துப் போட முயற்சி செய்வதை தமிழக அரசு கண்டிக்காமல் அமைதி காப்பது முறையல்ல.
இதுகுறித்து தமிழக வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ‘‘விரைவில் இரு மாநில அரசுகளும் இணைந்து மறு ஆய்வுநடத்தும்’’ என்று கூறியுள்ளது நகைப்புக்குரியது. உடனடியாக தமிழக எல்லையில் அத்து மீறி செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து, மறு ஆய்வு பணியை நிறுத்ததமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களுக்கு வெண்சாமரம் வீசிய திமுக, விழித்துக் கொண்டு தமிழர்களுக்கு கேரளகம்யூனிஸ்ட் அரசு செய்யும் துரோகத்தை தட்டி கேட்க வேண்டும்.
பழ.நெடுமாறன்: தமிழகம்-கேரளா எல்லை நெடுகிலும் இருக்கும் கிராமங்களில் கணினி முறையில் மறு சர்வே செய்யும் திட்டத்தை கேரள அரசு நவம்பர் 1-ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் கேரளா இந்த முயற்சியில் ஈடுபடுவது சட்டத்துக்கு புறம்பானதாகும்.
கடந்த 56 ஆண்டு காலத்தில் எல்லைப் பகுதியில் இருக்கக்கூடிய தமிழக கிராமங்களில் அத்துமீறிஉள்புகுந்து பல பகுதிகளைமலையாளிகள் ஆக்கிரமித்துள்ளனர். குமரி, நெல்லை, விருதுநகர், தேனி மாவட்டம் முதல் கோவை மாவட்டம் வரை இரு மாநில எல்லை நெடுகிலும் மலையாளிகள் ஊடுருவி காட்டு நிலங்களில் குடியேறுவது தொடர்கிறது. இவ்வாறுஆக்கிரமித்த பகுதிகளை தனக்கு சொந்தமானது என்று காட்டவே புதிய சர்வேயை கேரள அரசு நடத்துகிறது. உடனடியாக தமிழக அரசுதலையிட்டு இதை நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் நமது நிலப்பகுதிகளை இழக்க வேண்டிவரும்.