Published : 19 Nov 2016 09:36 AM
Last Updated : 19 Nov 2016 09:36 AM

கணவர் தந்து சிறுக சேர்த்த பெரிய தொகைக்கு தீர்வு என்ன?

ஐநூறும்.. ஆயிரமும்.. உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வது மற்றும் கையில் இருக்கும் நோட்டுகளை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரலில் பொதுமக்கள் பதிவுசெய்திருந்த சந்தேகங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வுபெற்ற உதவி பொதுமேலாளர் ரெ.முத்தரசு தரும் பதில்கள் இங்கே..

லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக நான் செலுத்தியிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு நடந்துகொண்டு இருப்பதால் நீதிமன்றத்தில் உள்ளது. டிசம்பர் 30-க்கு பிறகு எனக்கு அவை கிடைக்கும்பட்சத்தில் அவற்றை நான் மாற்றிக்கொள்ள இயலுமா?

- துளசிராம்ஜி, கதனநகரம்- பள்ளிப்பட்டு

வழக்கு நடக்கும் நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக விண்ணப்பியுங்கள். அந்த ரூபாய் நோட்டுகளுக்கு உரிய மதிப்பை தீர்ப்புக்குப் பின்னர் தங்களால் பெற இயலும்.

என் நண்பரின் வங்கிக் கணக்கில் அவ்வப் போது சேமிப்பாக பணம் செலுத்தி 8 லட்சம் ரூபாய் வரை வைத்துள்ளார். அவர் இதுவரை வருமானவரி செலுத்தினாலும் இத்தொகையை கணக்கில் காட்டவில்லை. இனிமேல் வங்கியில் செலுத்தும் தொகைக்குத்தான் கணக்குக் கேட்பார்களா அல்லது ஏற்கெனவே வங்கியில் இருக்கும் தொகைக்கும் சேர்த்து கேட்பார்களா?

- குமார், திருப்பூர்

நவம்பர் 10-க்கு பிறகு அதுவும் 2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தப்படும் பணத்துக்குதான் பெரும்பாலும் வருமான வரித் துறை கணக்குக் கேட்கும்.

இல்லத்தரசியான நான் எனது கணவர் எனக்குக் கொடுத்த பணத்தில் சிறுகச் சிறுக 5 லட்சம் ரூபாய் சேமித்து வைத்துள்ளேன். தற்போதைய நிலையில் என்னால் கணவரிடமும் சொல்ல முடியவில்லை, வங்கியில் சென்று புதிதாக கணக்கு தொடங்கவும் முடியவில்லை. இதற்கு ஒரு தீர்வைச் சொல்லவும்.

- கீதாஞ்சலி, சென்னை

முதலில் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட 2,000 ரூபாயை ரொக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். பின், தங்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அதில் பணத்தைச் செலுத்துவதே பாதுகாப்பானது. தங்கள் கணவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், அவர் கணக்கிலும் பாதிப் பணத்தைச் செலுத்தச் சொல்லலாம்.

விவசாய வருமானத்துக்கு வரி கிடையாது என வெளியிட்டிருந்தீர்கள். கரும்பு, நிலக்கடலை, மாம்பழம் உள்ளிட்ட கமிஷன் கடை வைத்திருப்பவர்களுக்கு வருமான வரி உண்டா?

- அருமைராஜ், திருநெல்வேலி

விவசாய வருமானத்துக்குத்தான் வருமான வரி கிடையாது. ஆனால், விளைபொருட்களை வாங்கி விற்பவர்களுக்கு எல்லா வருமானங்களையும்போல வரி உண்டு.

தனியார் மருத்துவமனைகள், தொழிலதிபர்கள், பெரிய வியாபாரிகள், அரசு அதிகாரிகள், கந்துவட்டிக்காரர்கள், தனியார் பள்ளி உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை நூறு நாள் வேலை திட்டத்துக்குச் செல்லும் பெண்கள் மூலமாக வெள்ளை ஆக்குகிறார்கள். இதைத் தடுக்க என்ன வழி?

- சுப்பிரமணியசுவாமி, பாளையங்கோட்டை

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று சொல்வதை அறிவு நம்ப மறுக்கிறது. இதுநாள் வரை யாரிடம், எவ்வளவு இருக்கும் எனத் தெரியாமல் இருந்தது. இப்போது தெரிய ஆரம்பித்திருக்கிறது. குறுக்கு வழியில் ரொக்கப் பரிமாற்றத்தைத் தடுக்க குற்றத்துக்கும், குற்றம் செய்தவர்களுக்கும் துணைபோகக் கூடாது என்ற மன மாற்றம் மக்களிடம் வர வேண்டும். அப்போதுதான் ஊழலையும் கறுப்புப் பண நடமாட்டத்தையும் ஒழிக்க முடியும்

பங்குச் சந்தைகளில் Participatory Notes எனப்படும் ‘பி நோட்ஸ்’களால் கறுப்புப் பணம் புழங்க வாய்ப்பு உள்ளதா? இதன் மூலம் வரி ஏய்ப்புக்கு வழி உள்ளதா? சில நாடுகளுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தால், அங்கு செய்யப்படும் வர்த்தகத்துக்கு வரிச் சலுகை வழங்குவதாக தெரிவிக்கிறார்களே உண்மையா?

என்.சேகரன், பரமக்குடி

ஒரு நாட்டின் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்து தங்களை முகம் காட்டிக்கொள்ள விரும்பாத வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ‘பி நோட்ஸ்’ உபயோகித்துத்தான் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். இந்தியாவிலும் அப்படித்தான் நடக்கிறது. லாபம் அதே வழிகளில் அவர்களைச் சென்றடைகிறது. முதலீடு யாருடையது அதன் லாபம் யாருக்கு போய்ச் சேர்கிறது என்பதே தெரியாத நிலையில் யாருக்கு வரி விதிப்பது?

‘பி நோட்ஸ்’ வர்த்தக சந்தையில் பல்லாயிரம் கோடிக்கு பணம் புழங்குகிறது. இந்தியாவில் அதைக் கட்டுபடுத்த முயற்சித்த செபி அதிகாரிகளும், அரசு இயந்திரமும் பின்விளைவைக் கண்டு மிரண்டுபோய் அடங்கிப் போனது சமீபத்திய வரலாறு. அந்நிய நிறுவன முதலீட்டில் 60% அளவுக்கு ‘பி நோட்ஸ்’ மூலமே நடைபெறுகிறது என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னதை மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

நான் ஒரு அரசு ஊழியர். எனது மனைவி தனியார் துறையில் பணிபுரிந்து சம்பாதித்ததில் ரொக்கக் கையிருப்பாக ரூ.1.40 லட்சம் வைத்துள்ளார். அதை தற்போது ‘பான்’ எண்ணுடன் வங்கியில் செலுத்தியுள்ளார். இதனால் சிக்கல் வருமா?

-தமிழ்ச்செல்வன், அரசு ஊழியர்

எந்தச் சிக்கலும் வராது; பயப்பட வேண்டாம்.

பான் கார்டு இல்லாதவர்கள் வங்கியில் அதிகபட்சம் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருந்தால் பல தவணைகளாக அனைத்தையும் வங்கியில் செலுத்திவிடுங்கள். பிற்பாடு வருமான வரித் துறை விளக்கம் கேட்டால் உங்களது விளக்கத்தை சொல்லுங்கள். அப்படியும் வரி விதிக்கப்பட்டால் யோசிக்காமல் வரியைச் செலுத்திவிட்டு நெஞ்சை நிமிர்த்தியபடி நிம்மதியாக இருங்கள்.

நான் மருந்து பிரதிநிதியாக 7 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். எனது சம்பளம் தவிர நிறுவனம் கொடுத்த இன்சென்டிவ் போன்றவற்றைச் சேர்த்து வைத்து எனது நண்பர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக பண உதவி செய்திருந்தேன். முறையாக வரி கட்டப்பட்ட இந்தப் பணத்தை இப்போது வங்கிக் கணக்கில் சேர்த்தால் பிரச்சினை வருமா?

- நவீன், மதுரை

ஏற்கெனவே வரி செலுத்தியிருப்பதால், பிரச்சினை ஒன்றும் வராது. கூடுமானவரை காசோலையாகத் திரும்பப் பெறுங்கள். தருபவர், பெறுபவர் இருவருக்குமே நிம்மதி.

புதிய 2,000 ரூபாய் நோட்டு சாயம் போகும் என்கிறார்களே அது உண்மையா? மேலும், இது மிகவும் மெல்லியதாக உள்ளதால் கிழிந்துவிடுமா? அல்லது வலுவாகத்தான் இருக்குமா? இந்த நோட்டை மண்ணுக்குள் புதைத்து வைத்தாலும் காட்டிக்கொடுத்துவிடும் என்பது உண்மையா?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

கிழியாத நோட்டு என்று எதுவும் கிடையாது. சண்டையில் கிழியாத சட்டை இல்லை என்பதுபோல அதிகப் புழக்கம் காரணமாகத்தான் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் நிறையக் கிழிந்துபோகின்றன. 2,000 ரூபாய் நோட்டுகளின் சுழற்சி அதிகமாக இருக்காது என்பதால் இது அவ்வளவு எளிதில் கிழிய வாய்ப்பு இல்லை. இந்த ரூபாயை மண்ணுக்குள் புதைத்து வைத்தால் காட்டிக் கொடுத்துவிடும் என்பதெல்லாம் வெறும் வதந்தியே. நிதியமைச்சரே இதை மறுத்திருக்கிறார்.

வங்கிகளில் ஒரு வாரத்துக்கு 24,000 பெற்றுக் கொள்ளலாம் என கூறுகிறார்கள். இதில் வாரக் கடைசி நாளாக எதைக் குறிப்பிடுகிறார்கள்?

- பி.சோமு, ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம்

நீங்கள் ஒரு வாரத்துக்குள் 24 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொள்ளலாம். அதில் கடைசி ஆயிரத்தை என்றைக்கு எடுக்கிறீர்களோ அன்றில் இருந்து ஒரு வார காலத்துத்தான் மீண்டும் பணம் எடுக்க முடியும்.

தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்

நீங்கள் செய்யவேண்டியது... 044-42890012 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர்முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களைப் பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x