Published : 10 Nov 2022 07:34 AM
Last Updated : 10 Nov 2022 07:34 AM
சென்னை: பொதுமக்களுக்கு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. விழிப்புணர்வு ஊர்வலத்தை தாம்பரம் போக்குவரத்து காவல் துறை துணை ஆய்வாளர் என்.குமார் தொடங்கி வைத்தார். டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனைகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்டி.ஜி.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இயக்குநர் டாக்டர் டி.ஜி.சிவரஞ்சனி, ஆலோசகர் டாக்டர் கே.எம்.ராதாகிருஷ்ணன், மூத்த மருத்துவர்கள், சிறப்பு மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட 50 பேர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு குறித்து மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன், டாக்டர் பிரவீண் சந்தர்ஆகியோர் கூறும்போது, "இந்தியாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோர், அதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2009 முதல் 2019-ம் ஆண்டுக்குள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 28.4% அதிகரித்துள்ளது" என்றனர்.
டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன் கூறும்போது, "மூளைக்குச் செல்லும் ரத்தம் அடைபட்டாலோ கசிவு ஏற்பட்டாலோ பக்கவாதம் ஏற்படும். இதற்குஉடனடியாக அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பலர் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகளை உடனடியாக அறிவதில்லை; அதற்குமருத்துவ சிகிச்சையும் மேற்கொள்வதில்லை. நெஞ்சுவலி ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு பலர் வருகின்றனர். மாரடைப்பு குறித்து அறியப்பட்ட அளவுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. எனவே பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். மிகவும் முக்கியமான தருணத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்" என்றார். காமாட்சி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT