சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு: குடியிருப்புகளை விரைவாக கட்ட உத்தரவு

சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு: குடியிருப்புகளை விரைவாக கட்ட உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர் குடியிருப்புகளை ஆய்வுசெய்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தற்போது நடைபெறும் ‘பி’ வகை குடியிருப்புகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசுப் பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தை, நேற்றுபொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த தாடண்டர் நகரில்தான், தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள்உள்ளன. பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், அரசு ஒதுக்கீட்டில் குடியிருக்கின்றனர். தாடண்டர் நகர் வளாகத்தில், 72 பழைய குடியிருப்புகள் இருக்கின்றன. அவற்றைஇடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

புதியதாக, 190 பி-வகை குடியிருப்புகள் ரூ.88.49 கோடியில் கட்ட உத்தரவிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த குடியிருப்பு, 19 பல்லடுக்கு குடியிருப்பு கட்டிடம் ஆகும். இதில், 10 அடுக்குக் குடியிருப்புகளின் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது. இன்னும் 9 அடுக்குக் குடியிருப்புகள் கட்டப்பட வேண்டியுள்ளது. இவற்றைத் தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், புதியதாக 190 சி-வகை குடியிருப்புகள் கட்டுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு குடியிருப்புகள் கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது துணை மேயர் மகேஷ்குமார், பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் இரா.விஸ்வநாத், சென்னைமண்டல பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in