Published : 10 Nov 2022 04:22 AM
Last Updated : 10 Nov 2022 04:22 AM
மதுரை: திண்டுக்கல்லுக்கு பிரதமர் வருகையால் மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் விமான நிலையத்தில் நுழைய 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நாளை( நவ.11) பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் விமானம் மூலம் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக வளாகத்துக்கு செல்கிறார். இதையொட்டி, மத்திய சிறப்புப் பாதுகாப்புப் படை கூடுதல் ஐ.ஜி. ஜிதேந்திர சிங் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் 2-வது நாளாக நேற்றும் நடந்தது.
பிரதமரின் வருகையால் விமான நிலையத்தில் உள், வெளி பகுதியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை கமாண்டண்ட் தலைமையில் விமான நிலைய ஓடுதள பகுதி, கோபுரங்களில் இருந்து கண்காணிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிரதமர் வருகையால் மதுரை விமான நிலையம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்படுகிறது. விமான நிலைய வெளி வாளகத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
காவல் துணை ஆணையர் ஆறுமுகசாமி, கூடுதல் ஆணையர் திருமலைக்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் விமான நிலையம், சோதனைச் சாவடி, பெருங்குடி, ரிங் ரோடு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு காரணமாக பயணிகளுடன் வருவோர் விமான நிலைய வெளி வளாகத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பார்வையாளர்களும் விமான நிலைய உள் வளாகத்தில் நுழைய மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸ் மெட்டல் ‘டிடெக்டர்’ கருவிகள், மோப்ப நாய் உதவியுடன் தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிக்கின்றனர். விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT