

திண்டுக்கல்: காந்தி கிராமம் வரும் பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் திரளாக வரவேற்பளிக்க அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கொடை ரோட்டில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவரை வரவேற்க தமிழக பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இரு நாட்களுக்கு முன்பு மாநிலப் பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் நிகழ்ச்சி நடைபெறும் இடங்ளைப் பார்வையிட்டார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று காந்தி கிராமத்துக்கு வந்தார். பல்கலைக்கழக வளாகத்துக்குச் சென்று நிகழ்ச்சி ஏற்பாடுகள், ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து கொடை ரோட்டில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தொண்டர்களை திரட்டுவது தொடர்பாக ஆலோசனை நடந்தது.