

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு கண்டனம்கூட தெரிவிக்காத அமைப்பாக மாநில மகளிர் ஆணையத்தின் செயல்பாடு உள்ளது. அந்த ஆணையத்துக்குள் அரசியல் நுழைந்துவிட்டதே இதற்கு காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உவாசுகி தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக் கிழமை கோவை வந்த அவர், `தி இந்து’ தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. அதேநேரம் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது போன்று உள்ளதே?
என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், பெண் பாதுகாப்பு தொடர்பாக ஆளும் கட்சியினர் பெரிதாக நடவடிக்கை எடுக்காததே இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம்.
தெருத்தெருவுக்கு மதுக் கடையை திறந்து வைத்துப் பணத்தை ஈட்டும் தொழிலில் அரசு ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் பெண்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறை அதிகரிக்குமே தவிர, குறையாது.
மதுக்கடைகளை எப்போது மாநில அரசு மூடுகிறதோ அப் போதுதான் பெண்களுக்கு எதி ராகத் தொடுக்கப்படும் வன்முறை குறையும். வருமானம் மட்டுமே குறிக்கோள் என்ற அடிப்படையில் அரசு செயல்படும்போது வெறும் விழிப்புணர்வால் மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துவிடாது.
பெருநகரங்களில் மட்டுமே பதிவாகும் வன்முறைகள் பெரிதுபடுத்தப்படுவதும், ஏனைய பகுதிகளில் பெரிதாகக் கவனம் செலுத்தப்படாத நிலையும் உள்ளதே?
தமிழகத்தில் கிராமங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உடனடியாக ஊடகங்கள் மூலமாக வெளிக்கொண்டு வரப்படுகின்றன. ஆனால், நடைபெற்ற வன்முறைக்கு எதிராக விசாரணையும், நீதியும்தான் தாமதமாகிறது.
தமிழகத்தில் செயல்பட்டுவரும் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவியாக சுமார் 80 வயது நிரம்பிய ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசியல் நுழைந்துவிட்டது.
ஆளும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு முறையும் தலைவியாக நியமிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மாநிலத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து எவ்வாறு அவர்களால் கண்டனம் தெரிவிக்க முடியும்?.
பெண்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்துவதால் மட்டுமே வன்முறை யைக் குறைத்துவிட முடியுமா?
பாடப் புத்தகங்களில் விழிப்புணர்வு கொண்டு வந்தால் மட்டுமே பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடாது. சினிமா, குடும்பம், கல்விக்கூடம், மத நிறுவனங்கள், அரசு என 5 அமைப்புகளும் ஒன்றிணைந்து பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒரு மித்த செயலிலும், விழிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் மாநில அரசிடம் வலியுறுத்த விரும்புவது என்ன?
மதுக்கடைகளை மூட வேண்டும், மாநில மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசியலை நுழைக்காமல் இருக்க வேண்டும்