Published : 22 Nov 2016 09:34 AM
Last Updated : 22 Nov 2016 09:34 AM

கிழக்கு கடற்கரை சாலை சீரமைப்பு பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை - புதுச்சேரி இடையே தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வரும் கிழக்கு கடற்கரை சாலை சீரமைப்பு பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை - புதுச்சேரி இடையே, கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வரும் சாலை விரிவாக்க பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞராக இருந்த அப்துல் சலீம் ஆஜராகி, கிழக்கு கடற்கரை சாலை 1995-ம் ஆண்டுக்கு முன்பு போடப்பட்டது. அங்கு ஏற்கெனவே உள்ள சாலை மட்டுமே சீரமைக்கப்பட்டு வருகிறது. அதனால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணை விதிகள், கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை விதிகள் ஆகியவற்றின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்று வாதிட்டார்.

இந்நிலையில் இம்மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.எஸ்.நம்பியார், தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், இப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:

அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதம் ஏற்கப்படுகிறது. சாலை சீரமைப்பு பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை.

ஒலி மற்றும் ஒளி மாசு ஏற்படுவதை குறைக்கும் வகை யில், சாலையோரம், தேவையான இடத்தில், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு உள்நாட்டு மரங்களை உடனடியாக நட வேண்டும். ஏற்கெனவே சாலையோரம் இருந்து பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்ட 51 மரங்களின் நிலை குறித்து அமர்வில் தெரிவிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகள் வரும் இடங்களில் வாகனங்களின் ஒலியை குறைக்கும் போக்கு வரத்து குறியீடுகளை சாலை யோரம் வைக்க வேண்டும். சாலைக்கு பக்கத்தில் 500 மீட்டர் இடைவெளியில் நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் கடலை நோக்கி வாகனங்களின் ஒளி செல்வதை தடுக்கும் வகையில் நெருக்கமாக, இடைவெளி இன்றி மரங்களை நட வேண்டும். சாலை தடுப்புகளில் செடிகளை நட வேண்டும். இப் பணிகள் அனைத்தையும் 2 மாதங் களுக்குள் முடித்து, அது தொடர் பாக அமர்வில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x