Last Updated : 17 Nov, 2016 12:52 PM

 

Published : 17 Nov 2016 12:52 PM
Last Updated : 17 Nov 2016 12:52 PM

அழிவின் விளிம்பில் விசைத்தறி தொழில்: சோமனூர், திருப்பூரில் மூடப்பட்ட 1.60 லட்சம் விசைத்தறிகள்- பரிதவிக்கும் 5 லட்சம் தொழிலாளர்கள்

வரலாறு காணாத அளவுக்கு நூல் விலை உயர்வு, ஜவுளி தேக்கம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1.60 லட்சம் விசைத்தறிகளும், 1,000 பாவு, நூல் உற்பத்தி மையங்களும் செயல்படாததால், சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

கோவை மாவட்டம் சோமனூரில் 1980-க்கு முன் சுமார் 15 ஆயிரம் விசைத்தறிகளில், காடா எனப்படும் சாயம் ஏற்றப்படாத துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. கைத்தறிகள் நிறைந்த அக்காலகட்டத்தில், தமிழகத்தின் அவசர ஜவுளித் தேவையை இவை பூர்த்திசெய்தன.

1977-லிருந்து 1984 வரை விசைத்தறிகளுக்கு உரிமம் ரத்து, பலமுனை வரிகள் நீக்கம், ஏற்றுமதிக்கு ஊக்கம் போன்ற சலுகைகளால் சோமனூரை மையமாகக் கொண்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் வளர்ச்சியடைந்தன.

சோமனூரில் சுமார் ஒரு லட்சம், பல்லடத்தில் 25 ஆயிரம், அவிநாசியில் 15 ஆயிரம், தெக்கலூரில் 7 ஆயிரம், கண்ணம்பாளையத்தில் 10 ஆயிரம், பெருமாநல்லூரில் 1,500, மங்கலத்தில் 5 ஆயிரம் உட்பட மொத்தம் 2 லட்சம் தறிகள் இயங்கின.

இவற்றுக்குத் தேவையான பாவு, நூல் சப்ளை செய்ய 300-க்கும் மேற்பட்ட சைசிங் மில்கள், சோமனூர், பல்லடத்தில் இயங்குகின்றன. இதன் மூலம் நேரடியாக சுமார் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

இவ்வாறு இந்த தொழிலில் நேரடியாக 2 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபடுகின்றனர். இங்கு உற்பத்தியாகும் துணிகள் குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு, சாயமேற்றி, டிசைனிங் செய்து, ஆயத்த ஆடைகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகம் செய்கின்றனர். மேலும், ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுறது. சோமனூர், பல்லடத்தில் விசைத்தறி துணிகளை வாங்க வடநாட்டு வியாபாரிகள் ஏராளமானோர் வருவார்கள்.

இந்நிலையில், விசைத்தறி ஜவுளி வர்த்தகம் தற்போது பெரிதும் பாதிக்கப் பட்டு 80 சதவீத தறி கிடங்குகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியது:

ஜவுளி உற்பத்தியாளர்களான சைசிங் மில்களிடம் பாவு நூல் வாங்கி, துணியாக நெய்து அவர்களிடமே அளிக்கும் பணியில் சுமார் 20 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தலா 4 முதல் 50 தறிகள் வரை வைத்துள்ளனர். உற்பத்தி ரகங்களுக்கு ஏற்ப மீட்டருக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு, இவர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி அளிக்கின்றனர். மேலும், ஜவுளி உற்பத்தியாளர்களே தனிப்பட்ட முறையில் விசைத்தறிகளை இயக்கி வருகின்றனர்.

ஒரு விசைத்தறி மூலம் சராசரியாக 65 மீட்டர் துணி தினமும் தயாரிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் தறிகள் மூலம் தினமும் 1.30 கோடி மீட்டர் துணி உற்பத்தியாகிறது. ஒரு மீட்டர் துணியின் விலை ரூ.30 எனக் கணக்கிட்டால், ரூ.40 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. விசைத்தறி தொழிலாளி 12 மணி நேரம் வேலை செய்து, தினமும் ரூ.500 முதல் ரூ.700 வரை ஊதியம் பெறுகிறார்.

1984-ம் ஆண்டு வரை விறுவிறுப்பாக இருந்த இந்த தொழில், பின்னர் மத்திய அரசின் புதிய ஜவுளிக் கொள்கைகளால் சரியத் தொடங்கியது. உச்சகட்டமாக 2 ஆண்டுகளுக்கு முன் ஜவுளி ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இதனால், துணிகள் தேக்கமடைந்தன. அதேசமயம் பஞ்சு, நூல் விலை ஏற்றத்துக்கு தக்கபடி ஜவுளிக்கு விலையும் கிடைக்கவில்லை.

உதாரணமாக, ஒரு மீட்டர் காடாவை உற்பத்தி செய்ய ரூ.24 செலவாகும் நிலையில், வடநாட்டு வியாபாரிகள் ரூ.21-க்கு கேட்கின்றனர். நஷ்டத்துக்கு தொழில் செய்ய ஜவுளி உற்பத்தியாளர்கள் முன்வருவார்களா?

அதனால், கடந்த ஆண்டே ரூ.100 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்ததாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை…

கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த சைசிங் உரிமையாளர் கூறும்போது, “இதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எங்களிடம் உள்ள விசைத்தறிகளில் நெய்வது தவிர்த்த ஜவுளித் தேவைக்கு மட்டுமே, பிற விசைத்தறியாளர்களிடம் பாவு, நூல் கொடுத்து நெய்கிறோம். எங்களிடம் வியாபாரிகள் வாங்கும் விலைக்கு ஏற்ப நெசவு செய்து தருமாறு கேட்கிறோம். அவர்கள் அதை ஏற்காத நிலையில், எங்களது கூடத்திலேயே ஜவுளியை தயாரித்துக் கொள்கிறோம். இதில், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.

கடும் நெருக்கடி…

விசைத்தறி இயந்திரங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளி ராஜபாண்டியன் கூறும்போது, “இயந்திர பழுதை நீக்குவது, வெல்டிங் வைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக முன்பு 10 பேர் என்னிடம் வேலை செய்தனர். தற்போது, 4 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு வேலை கொடுப்பதே சிரமமாக உள்ளது. சைசிங் மில்களில் பாதிக்கும் மேற்பட்டவை முடங்கிவிட்டன. இதுபோன்ற கடும் நெருக்கடி எப்போதும் ஏற்பட்டதில்லை” என்றார்.

சுமுக முடிவு காணப்படும்…

தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் கூறும்போது, “கடந்த தேர்தலுக்கு முன்பு செய்யப்பட்ட ஒப்பந்தப்படி நாங்கள் கூலி உயர்வு தருகிறோம் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் எழுதிக்கொடுத்துள்ளனர். தற்போது, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் பிரச்சினை எழுந்துள்ளது. முத்தரப்புக் கூட்டத்துக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் முழுமையாக வராமல் இருந்தனர். கடைசியாக அவர்களிடம் பேசியதில், கூலி உயர்வை தந்து விடுகிறோம் என்று உறுதியளித்தனர். எனவே, விரைவில் பிரச்சினை சுமுகமாக முடித்துவைக்கப்படும்” என்றனர்.

அதேசமயம், பங்களாதேஷ் வழியாக சீனா உள்ளிட்ட அயல்நாடுகளின் துணிகள் மிகக் குறைந்த விலையில், இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு, தொழில் நெருக்கடி காரணமாக தீபாவளிக்கு முன்பே 60 சதவீத விசைத்தறிகள் முடங்கின. தற்போது, கோவை திருப்பூரில் மாவட்டங்களில் 80 சதவீத தறிகள் செயல்படவில்லை. விசைத்தறி யாளர்கள் வாழ வழியின்றித் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது. கடந்த மாதம் அன்னூரைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

எனவே, இப்பிரச்சினையில் மத்திய, மாநில தலையிட்டு, ஜவுளிக் கொள்கைளில் மாற்றம் கொண்டு வராவிட்டால், தொழில் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்படும். எனவே, நெருக்கடியைத் தீர்க்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், பட்டினிச் சாவு, தற்கொலைகளைத் தடுக்க முடியாது என்றனர்.

போராட முடிவு செய்துள்ளோம்

சங்கத் தலைவர் சி.பழனிசாமி கூறும்போது, “ஆண்டுதோறும் விலைவாசி, உதிரிபாகங்கள் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு, ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களிடையே கூலி உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்படும். இது 25 வருடங்களாக அமலில் உள்ளது. 2014-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 15 மாதங்கள் மட்டுமே கூலி தந்த உற்பத்தியாளர்கள், பின்னர் பழையை கூலியையே தந்தனர். அதாவது, துணி நெய்ய மீட்டருக்கு 8 பைசா அளிக்கப்பட்ட நிலையில், அதை 6.25 பைசாவாக குறைத்தனர். ஜவுளி தேக்கம், கட்டுப்படியாகாத விலை என இதற்கு காரணம் கூறினர். இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.

இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பேச்சுவார்த்தையில், உரிய கூலியைக் கொடுக்கிறோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை கட்டாயமாக்கி, ஜவுளி உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் விதித்த நிபந்தனையை நாங்கள் ஏற்றோம். இதையடுத்து, 3 மாதங்களுக்கு உரிய கூலி வழங்கிய உற்பத்தியாளர்கள், மீண்டும் கூலியைக் குறைத்துவிட்டனர். அதுமட்டுமின்றி, 7 வாரங்கள் காத்திருக்கவைத்து, கூலியைத் தருகின்றனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக 5 முறை முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், உற்பத்தியாளர்கள் தரப்பில் 5 அல்லது 6 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால், உரிய தீர்வு காணப்படவில்லை. எனவே, போராட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

வேறு தொழிலை நாடுவோம்

சோமனூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கூறும்போது, “பாவு, நூல் வராதது, கூலி வழங்காதது உள்ளிட்ட காரணங்களால் தீபாவளிக்குப் பிறகு எனது 18 தறிகள் இயங்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பண நெருக்கடியும் பிரச்சினையைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்பெல்லாம், நெருக்கடி ஏற்பட்டால் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும். இப்போது, 11 மாதங்களாகவே தொழில் நசிவு தொடர்கிறது. இதனால், பலர் வேறு தொழிலுக்கு சென்றுவிடலாமா என்று கருதுகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x