சென்னையில் ஆபத்தான நிலையில் 200 கட்டிடங்கள்: இடிக்க நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி? 

சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையில் இடிந்து விழுந்த வீடு.
சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையில் இடிந்து விழுந்த வீடு.
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபத்தான நிலையில் உள்ள 200 கட்டிடங்களை இடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பருவமழை காலங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்து மனிதர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. ஒவ்வொரு பருவமழையின்போதும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பிராட்வே பகுதியில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் மரணம் அடைந்தனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் இதுபோன்று ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட இடங்களில்தான் பழைய கட்டிடங்கள் அதிகமாக உள்ளன. இந்தப் பகுதிகளில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடங்களுக்கு மாநகராட்சி சார்பில் முறையான நோட்டீஸ் அளித்தும் பலர் இந்தக் கட்டிடங்களை காலி செய்யாமல் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சில கட்டிடங்கள் தொடர்பான வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இந்தக் கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாநகராட்சி ஆணையரின் உத்தரவுப்படி ஆபத்தான கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், பல இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, மாநகராட்சி பொறியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்தக் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in