Last Updated : 09 Nov, 2022 04:55 PM

 

Published : 09 Nov 2022 04:55 PM
Last Updated : 09 Nov 2022 04:55 PM

புதுச்சேரி | பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக அமைச்சரிடம் பொதுமக்கள் நேரில் புகார்

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பெற்றோர், பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அடுத்த கொடாத்தூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கட்டிடம் சிதிலமடைந்ததையடுத்து கல்வித் துறை மூலம் ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணி நிறைவடைந்த நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான நமச்சிவாயம் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் கணினி வகுப்பறைகளை பார்வையிட்டார். அப்போது அமைச்சர் நமச்சிவாய்த்திடம், பள்ளி மாணவர்கள் ஆட்டோகிராப் வாங்கியும், கை கொடுத்து மகிழ்ந்தனர்.

அச்சமயம் பள்ளிக்கு வந்திருந்த மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு தரமற்றதாக, சுவை இல்லாமல் இருப்பதாக புகார் அளித்தனர். இதையடுத்து, பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த உணவை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு செய்தார். உணவை சுவைத்தும் பார்த்தார்.

மேலும், உடன் வந்திருந்த கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் உணவை வழங்கி சுவைத்து பார்க்கும்படி கூறினார். அதில் உணவு தரமற்றதாகவும், சுவை இல்லாமலும் இருப்பது தெரிய வந்தது. உடனே அவர் உணவு தயார் செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தன்னை வந்து சந்திக்கும்படி கல்வித்துறை அதிகாரியிடம் உத்தரிவிட்டார்.

அமைச்சர் நமச்சிவாயம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கொடாத்தூரில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள், பெற்றோர்கள் சிலர் உணவு தர மற்ற நிலையில் இருப்பதாக புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில் உணவை சுவைத்து அதன் தரத்தை சோதித்த பொழுது அவர்கள் தெரிவித்தபடி சில குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கல்வித் துறை அதிகாரிகள், உணவு தயார் செய்யும் நிறுவனத்தினை அழைத்து பேசி உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும். மேலும் மாணவர்களுக்கு உணவுடன் முட்டை வழங்க ஒப்பந்த கோரப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது.

விரைவில் முட்டை வழங்கவும், மாணவர்களுக்கான சீருடை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கான இலவச பேருந்து இயக்குவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. பேருந்து உரிமையாளர்களுக்கு ஒர்க் ஆர்டரும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பேருந்தின் தற்போதைய தரம் குறித்து ஆர்டிஓ சான்றிதழ் சமர்ப்பித்த பின், பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x