தென்காசியில் ஒருவர் உயிரிழப்பு: தமிழகத்தில் மழை பலி 28 ஆக அதிகரிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மழை காரணமாக தென்காசியில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

வட கிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (நவ.8) தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் 4.90 மி.மீ. மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக 33.93 மி.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 27 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று தென்காசி மாவட்டத்தில் 1 மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று பெய்த கனமழையின் காரணமாக 48 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 59 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சியில் 69 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 869 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 474 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 402 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 72 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 241 தொலைபேசி அழைப்புகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in