வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னையில் 2 லட்சம் பேர் நீக்கம்

வாக்காளர் பட்டியல் வெளியீடு
வாக்காளர் பட்டியல் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நவ.9) வெளியிடப்பட்டது. இதில் 2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 1.1.2023ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2023ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சுருக்கமுறை திருத்தம் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நவ.9) வெளியிடப்படுகிறது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பதை குறித்து சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள வரும் 12, 13, 26, 27 ஆகிய 4 நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 3,723 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20,04,860, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20,74,616, இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 1,102 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 40,80,578 ஆகும். இந்த வாக்காளர் பட்டியலில் இருந்து 1,01,483 ஆண் வாக்காளர்கள், 1,13,343 பெண் வாக்காளர்கள் மற்றும் 94 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,14,920 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 12,234 ஆண் வாக்காளர்கள், 14,525 பெண் வாக்காளர்கள் மற்றும் 50 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26, 799 ஆண் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 19,15,611 ஆண் வாக்காளர்கள், 19,75,778 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,058 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38,92,457 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 1,72,211 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3,05,994 வாக்காளர்களும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in