

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். நாளை முதல் 3 நாட்களுக்கு இடியுடன் கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், இதே பகுதிகளில் நவ.9-ம் தேதி (இன்று) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 9-ம் தேதி (இன்று) இடியுடன் மிதமான மழை பெய்யும்.
நவ.10, 11, 12-ல் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
11-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யும்.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
12-ம் தேதி திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை ஆகிய 11 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.