13 நாட்களாக தொடரும் பணத்தட்டுப்பாடு: வங்கிகளில் பணம் மாற்ற முடியாமல் மக்கள் தவிப்பு

13 நாட்களாக தொடரும் பணத்தட்டுப்பாடு: வங்கிகளில் பணம் மாற்ற முடியாமல் மக்கள் தவிப்பு
Updated on
1 min read

13 நாட்களாக தொடரும் பணத் தட்டுப்பாட்டால் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

கறுப்புப் பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

முதலில் ஒரு சில தினங்களுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு அந்த உச்சவரம்பு ரூ.4 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டது.

மேலும், ஏடிஎம்களில் ரூ.2 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்ற விதி தளர்த்தப்பட்டு ரூ.2 ஆயிரத்து 500 வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாததால் ஏடிஎம்கள் முடங்கின.

இதனிடையே, ஒரு நபரே மீண்டும் மீண்டும் வங்கியில் பணம் மாற்றுவதை தடுப்பதற்காக விரல்களில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கிடையே, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அளவுக்கு மட்டுமே மாற்றி வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நடவடிக்கைகளால் வங்கிகளில் கூட்டம் குறையத் தொடங்கியது.

கடந்த 11 நாட்களாக விடுமுறையின்றி செயல்பட்ட வங்கிகள் விடுமுறை தினமாக நேற்றுமுன்தினம் மூடப்பட்டன. மீண்டும் நேற்று வங்கிகள் திறக்கப்பட்ட நிலையில் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

புதிய ரூ.500 எப்போது?

ஆனால், நேற்றும் வழக்கம் போல பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மாற்றித் தரவில்லை. சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தன. அதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாயினர்.

இதற்கிடையே, புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு எப்போது வரும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in