

சென்னை: கூட்டுறவுத் துறை மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதால் 6 மாதங்களில் ரூ.66 ஆயிரம் கோடிக்கு வைப்பீடு வந்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று கூறியதாவது: அகில இந்திய கூட்டுறவு வார விழா, நவ.14 முதல் 20 வரை தமிழகத்தில் நடைபெறுகிறது. கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தவும், கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை கவுரவிக்கவும், கூட்டுறவு நோக்கத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து, அதை சிறப்பாக வழி நடத்துவதற்கும் இந்த கூட்டுறவு வார விழா மிக பயனுள்ளதாக இருக்கும். கூட்டுறவு சங்கம் என்பது, பொருளாதார சுரண்டல் இல்லாமல், எந்த தவறும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் உயர் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. முதன்முதலில் கூட்டுறவு கடன் சங்கத்தை நாம்தான் தொடங்கினோம். தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்திருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ரூ. 5,018 கோடிக்கு கணக்கெடுத்து, இதுவரை ரூ.4,888.88 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.6,400 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரம் தரப்பட்டது. கூட்டுறவு மருந்தகங்களில், 6 மாதத்தில் ரூ.100 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இன்னும் ரூ.100 கோடி வருவதற்கு வாய்ப்புள்ளது. உயிர் காக்கக்கூடிய மருந்துகளை மக்களுக்கு இன்னும் குறைந்தவிலையில் கொடுப்பதற்கு அதிக கவனம் செலுத்துகிறோம்.
கடந்த 2020-ம் ஆண்டு கூட்டுறவுத் துறையில் இருந்த வைப்பீடு ரூ.67 ஆயிரம் கோடிதான். இந்த ஆண்டு, 6 மாதத்திலேயே ரூ.66 ஆயிரம் கோடி வந்துவிட்டது. அந்த அளவுக்கு கூட்டுறவுத் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் இதில் வைப்பீடு செய்கின்றனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். பேட்டியின்போது, துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ரூ.5,018 கோடிக்கு கணக்கெடுத்து, இதுவரை ரூ.4,889 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.