

சென்னை: பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: இன்றைய நடைமுறையைப் பின்பற்றி பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முடிவு செய்து, 2014-ம் ஆண்டு சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இதை தாக்கல் செய்ய பாஜக 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சமூக நீதியாகாது. குறிப்பாக 5 ஆயிரம் ஆண்டுகள் சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்தினர், எங்களுக்கும் சமூக நீதி வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும். ஆனால் எங்களைப் போலவே அவர்களும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்துக்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்புக்கும் அது உரியதல்ல. 50 சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால் அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. எனவே, 10 சதவீத இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது. பொதுப் பிரிவினர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மேலும் மேம்படுத்த இயலுமா என சட்ட வல்லுநர்களும், சமூக பங்கேற்பாளர்களும் விவாதிக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இடஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத பிரிவினருக்கு குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோரி வந்துள்ளது. அதனடிப்படையில் இச்சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. ஆனால் வருமான வரம்பை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதே நேரம், இடஒதுக்கீடு பெறாத பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இச்சட்டம் வலியுறுத்துகிறது. தமிழக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இடஒதுக்கீடு பெறாமல் இருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கு 10 சதவீதம் என்பது அதீத ஒதுக்கீடு. எனவே, தமிழகத்தில் இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையைக் கணக்கீடு செய்வதற்கான ஒரு ஆணையத்தை அமைத்து, அதன் பரிந்துரைகள் அடிப்படையில் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நம் நாட்டு மக்கள் யாராக இருந்தாலும், பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அவர்களும் முன்னேற வேண்டும் என்பதுதான் தமாகாவின் கருத்து. அதே சமயம், ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டுக்கும் பாதிப்பு வரக்கூடாது. மேற்கண்ட இரண்டின் அடிப்படையில் பின்தங்கியுள்ள அனைத்து தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அந்த வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமாகா வரவேற்கிறது.
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்தப் பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த இடஒதுக்கீடு பிராமணர்களுக்கு மட்டும் தான். மற்ற வகுப்பினருக்கு இல்லை என்பது போன்ற பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிந்தப் பொதுப் பிரிவினரில் ஏதோ ஏழைகளே இல்லை. எல்லோரும் கோடீஸ்வரர்கள் என்பது போல் சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தான் அனைவருக்கும் முதல்வர், எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் முதல்வர் என்று நம் முதல்வர் அடிக்கடி சொல்வது உண்மையென்றால், இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி காட்டட்டும். அதுதான் தர்மம். நியாயம் ஆகும்.