மதுரையின் 3 வட்டாரங்களை சேர்ந்த 500+ ஆசிரியர்கள் அக்டோபர் மாத சம்பளம் இன்றி சிரமம்

மதுரையின் 3 வட்டாரங்களை சேர்ந்த 500+ ஆசிரியர்கள் அக்டோபர் மாத சம்பளம் இன்றி சிரமம்
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டத்தில் 3 வட்டாரங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.

தமிழக அரசு தொடக்கக் கல்வித் துறையில் நிர்வாக சீரமைப்புக்காக கடந்த மாதம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை குறைத்தும், புதிய பணியிடங்களை உருவாக்கியும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஆகிய 3 ஒன்றியங்களில் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் குறைக்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் 3 வட்டாரக் கல்வி அலுவலர்கள் 2 இடமாக குறைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஒன்றியத்தில் 2 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் நிர்வாக சீரமைப்பில் ஆசிரியர்கள் பட்டியல் விடுபட்டதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளம் இதுவரை கிடைக்காததால் சிரமப்படுகின்றனர்.

மேலும் ஆசிரியர்கள் பெற்ற கடன் தொகைக்கான மாத தவணைகளை குறித்த தேதியில் செலுத்த முடியாமல் அபராதத்துடன் செலுத்தும் நிலையில் உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் பெ.சீனிவாசகன் கூறியதாவது:

திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஒன்றியங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்பணம் கிடைக்கவில்லை. தற்போது அக்டோபர் மாத சம்பளமும் இதுவரை கிடைக்கவில்லை. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் பெற்ற ஆசிரியர்கள் மாத தவணையை செலுத்த முடியாமல் அபராதத்துடன் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாமதமின்றி சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, சம்பளப் பட்டியல் விவரங்களை கருவூலத்தில் உள்ள புதிய சாப்ட்வேர் மூலம் பதிவு செய்வதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வரவில்லை. பதிவேற்றும் பணியால் நவ.15-குள் சம்பளம் கிடைத்துவிடும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in