

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானா மதுரை ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதத்தால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
மானாமதுரை ஒன்றியக் கூட்டம், அதன் தலைவர் லதா தலைமையில் நேற்று நடை பெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினிதேவி, சங்கரபரமேஸ்வரி, துணைத் தலைவர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்: கவுன்சிலர் ருக்குமணி (அதிமுக): ராஜகம்பீரத்தில் எனது வீட்டுக்கு 2 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு கேட்டும் தரவில்லை. லஞ்சம் கொடுக்காததால் இணைப்பு கொடுக்க மறுக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை. டீ, மிக்சர் சாப்பிடத்தான் கூட்டத்துக்கு வருகிறோமா என்றார்.
அவரது பேச்சுக்கு திமுக கவுன்சிலர் அண்ணாத்துரை எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல், குழப்பம் நிலவியது.
கவுன்சிலர்கள் வெளிநடப்பு: கவுன்சிலர் பஞ்சவர்ணம் தர் (அதிமுக): ஊராட்சிகளில் டெங்கு ஒழிப்புப் பணி நடக்காமலேயே, மஸ்தூர் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கியதாக முறை கேடு நடந்துள்ளது என்றார். அதைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளுக்கு தலைவரும், அதிகாரிகளும் பதில் அளிக்க வில்லை எனக் கூறி 2 அதிமுக கவுன்சிலர்களும் வெளிநடப்புச் செய்தனர்.