

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதி களில் நேற்று அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அரவக்குறிச்சி தொகுதியில் 81.92 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை வரும் 22-ம்தேதி நடைபெறவுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக, தேர்தல் ஆணையத் தால் தஞ்சாவூர் மற்றும் அரவக் குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
6 மாத இடைவெளிக்குப் பின்னர், இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றும் 7 சுயேச்சைகள் என தஞ்சாவூர் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் 39 பேர் போட்டியிட்டனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்களிக்க வந்து வரிசையில் நின்றவர்களுக்கு, டோக்கன் தரப் பட்டு இரவு 7 மணி வரை வாக்க ளிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாது காப்பான அறைகளில் வைக்கப் பட்டன.
அரவக்குறிச்சியில் 81.92%
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் 157 இடங்களில் உள்ள 245 வாக்குச்சாவடி மையங் களில் வாக்காளர்கள் நேற்று காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்தனர். தோட்டக்குறிச்சி யில் வாக்குச்சாவடி 69-ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வரிசை மாறியிருப்பதாக எழுந்த புகாரால் 10 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. ஒரு சில இடங்கள் நீங்கலாக தொகுதி முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்றது. தஞ்சாவூர் தொகு தியில் 69.02 சதவீத வாக்குகளும் அரவக்குறிச்சி தொகுதியில் 81.92 சதவீத வாக்குகளும் பதிவாகியுள் ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் 70.19%
திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக எம்எல்ஏ எஸ்.எம்.சீனிவேல் மறைந் ததையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக, சுயேச்சைகள் உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மொத்தம் 97 மையங்களில் 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. 5 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர், 1,600 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பதற்றமானவையாக அறியப்பட்ட 54 வாக்குச்சாவடி களில் கூடுதல் துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர்.
நகரைவிட கிராமப்பகுதிகளில் வாக்காளர்களிடம் அதிக ஆர்வம் காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இத்தொகுதியில் 70.19 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லித்தோப்பில் 85.76%
புதுச்சேரி - நெல்லித்தோப்பு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததால் நேற்று இடைத்தேர்தல் நடை பெற்றது. இத்தொகுதியில் புதுச் சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். 26 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந் தன. பதற்றமான 12 வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந் தனர்.
நெல்லித்தோப்பில் கடந்த மே 2016 தேர்தலில் 85.44 சதவீத வாக்குகள் பதிவாயின. நேற்று நடை பெற்ற இடைத்தேர்தலில் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவானது.
22-ல் வாக்கு எண்ணிக்கை
நெல்லித்தோப்பு உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை, வரும் 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும் என்றும் பகல் 12 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.