

திருவண்ணாமலை: ஆரணி அருகே அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் தூசிகளால் சுவாச பிரச்சினை ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தில் இயங்கி வரும் அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் தூசிகளால் பாதிக்கப்படுவதாக கூறி, கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, “அரிசி ஆலைகளில் இருந்து கரும்புகை மற்றும் தூசிகள் வெளியேறுகின்றன. இதனால், சுவாச பிரச்சினை மற்றும் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறோம். அரிசி ஆலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சிகிச்சைக்காக ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்தும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி மன்றமும் கண்டுகொள்ள வில்லை. அரசி ஆலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் தூசிகளை கட்டுப்படுத்த வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், ராட்டினமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.