Last Updated : 08 Nov, 2022 11:59 PM

 

Published : 08 Nov 2022 11:59 PM
Last Updated : 08 Nov 2022 11:59 PM

கோவை | சாலை விரிவாக்க பணிக்காக அரசமரம் வேரோடு அகற்றப்பட்டு மறுநடவு

படவிளக்கம்: கோவை செல்வபுரத்தில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் வேரோடு வெற்றிகரமாக அகற்றப்பட்ட அரசமரத்தை பார்வையிட்ட வனத்துறை பயிற்சி அதிகாரிகள்.

கோவை: கோவை செல்வபுரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட இருந்த அரசமரம் வெற்றிகரமாக வேரோடு அகற்றப்பட்டு மறுநடவு செய்யப்பட்டுள்ளது.

கோவை - சிறுவாணி சாலையில் செல்வபுரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக சுமார் 40 வயதுடைய அரசமரம் வெட்டப்பட இருந்தது. தகவல் அறிந்த மாவட்ட பசுமை குழுவினர் மரத்தை அங்கிருந்து அகற்றி மறுநடவு செய்ய நெடுஞ்சாலைத் துறைக்கு பரிந்துரைத்தனர்.

அதன்படி, நேற்று (நவ.8) காலை அந்த மரத்தை மறுநடவு செய்யும் வகையில் வேரோடு அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியை தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் பயிற்சி பெறும் வனத்துறை அதிகாரிகள் 43 பேர், மாநில வனப்பணிக்கான மத்திய பயிற்சி நிறுவனத்தில் (காஸ்பாஸ்) பயிற்சி பெறும் வனத்துறை அதிகாரிகள் 47 பேர் நேரடியாக பார்வையிட்டனர். பின்னர், பாதுகாப்பாக ஜேசிபி இயந்திரம், கிரேன் உதவியுடன் அந்த மரம் வேரோடு அகற்றப்பட்டு, லாரியில் ஏற்றி சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில் மறுநடவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மரங்கள் மறுவாழ்வு இயக்கத்தின் தலைவர் சையது கூறும்போது, "நெடுஞ்சாலைத்துறை, கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை, மின்சாரத்துறை ஆகியோரின் ஒத்துழைப்போடு இந்தப் பணி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் இருந்து பயிற்சி பெறும் வனத்துறை அதிகாரிகள் நேரடியாக இந்தப் பணியை பார்வையிட்டதன் மூலம் பல்வேறு பகுதிகளில் வருங்காலத்தில் மரங்கள் வெட்டி அகற்றப்படுவது தடுக்கப்பட்டு, அவை மறுநடவு செய்ய வாய்ப்புள்ளது”என்றார்.

இந்த நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், சிறுதுளி, நம்ம கோவை, வன உயிர், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (டபிள்யுஎன்சிடி) உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x