

அரசு சார்பில் எழிச்சூர், தையூரில் கட்டப்பட்டு வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் கள் தங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்கள் மற்றும் கோவை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்கள் என மொத் தம் 9 இடங்களில் ரூ.105 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு அறைகள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா 2014-ல் அறிவித்தார்.
இதன் முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சி பகுதியில், திருப்போரூர்-கேளம்பாக்கம் செல்லும் ஓஎம்ஆர் சாலையோரம், 1.24 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதேபோல், படப்பை அடுத்த எழிச்சூர் கிராமத்திலும் நிலம் தேர்வு செய்யப்பட்டு 2015-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.
அம்மா உணவகம், சுகாதார மையம் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் பயில அங்கன்வாடி மையம், வங்கி சேவை மையம், சலவை நிலையம், முதியோர் பாதுகாப்பு மையம், படிப்பகம், பொழுதுபோக்கு பூங்கா ஆகிய வசதிகளுடன் 3 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
தையூர், எழிச்சூர் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் குடியிருப்பின் 90 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந் துள்ளன. இதை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கட்டுமான தொழி லாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கட்டுமான தொழி லாளர்கள் நலவாரிய அலுவலர் செந்தில்குமாரியிடம் கேட்டபோது, ‘தையூரில் ரூ.16.76 கோடியிலும், எழிச்சூரில் ரூ.14.90 கோடியிலும் ஆயிரம் தொழிலாளர்கள் தங்கும் வகை யில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்புகளின் கட்டு மான பணிகளை அவ்வப்போது நேரில் பார்த்து ஆய்வு செய்து வருகிறோம்.
இதில், தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளான சுகாதார மையம், சலவை நிலையம், முதியோர் பாதுகாப்பு மையங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் நிலையில் உள்ளன’ என்றார்.