Published : 08 Nov 2022 12:51 PM
Last Updated : 08 Nov 2022 12:51 PM

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வெளிநாட்டில் தஞ்சம்: ஐ.நா.வுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "கனடா நாட்டில் தஞ்சம் புகும் நோக்குடன் 306 ஈழத்தமிழ் அகதிகள் பயணித்த கப்பல் பிலிப்பைன்ஸ் அருகில் புயலில் சிக்கித் தவித்த நிலையில், அவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைத்திருப்பது நிம்மதியளிக்கிறது. சிங்கப்பூர் அரசு காலத்தினால் செய்த உதவி பாராட்டத்தக்கது.

முதலில் போராலும், பின்னர் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாமல், பிற நாடுகளில் தஞ்சமடைய தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு அகதிகள் தகுதியும், கண்ணியமான வாழ்வுரிமையும் மறுக்கப்படுகிறது.

அதனால் கனடா, இங்கிலாந்துக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் தேடி பாதுகாப்பற்ற முறையில் கப்பல் பயணம் மேற்கொள்ளும் ஈழத்தமிழ் அகதிகள் பல தருணங்களில் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர்; இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தரவும், இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கவும் ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x