Published : 08 Nov 2022 04:48 AM
Last Updated : 08 Nov 2022 04:48 AM
சென்னை: எரிசக்தித் துறை சார்பில், ரூ.594.97 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின்நிலையங்கள், 57 துணை மின் நிலையங்களில் திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றிகளின் செயல்பாட்டினை முதல்வர் மு,க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், 8 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதிகரித்துவரும் மின்தேவை: தமிழகத்தில் தொழிற்துறை, விவசாயம், நகர்ப்புற மற்றும் ஊரக மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாக அதிகரித்துவரும் மின்தேவைக்கு ஏற்றவாறு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க செய்வதற்காக, ரூ.373.22 கோடி செலவில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 14 புதிய துணை மின் நிலையங்கள், ரூ.91.57 கோடியில் 57 துணை மின் நிலை யங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஈரோடு, திருவள்ளூர் வேலூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 3 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் வேலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 33 கி.வோ. திறன் கொண்ட 14 புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர்,ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 57 துணை மின் நிலையங்களில் ரூ.91.57 கோடி செலவில்திறன் உயர்த்தப்பட்ட 57 மின்மாற்றிகளின் செயல்பாட்டையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
8 நிலையங்களுக்கு அடிக்கல்: மேலும், கடலூர், கரூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்படவுள்ள 8 புதிய 110 கி.வோ துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மின்துறைஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, எரிசக்தித்துறை கூடுதல்தலைமை செயலர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன், தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மா.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT