

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் வருகை தருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நவ.11-ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டுகாந்திகிராம பல்கலைக்கழகத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பட்டமளிப்பு விழா நடைபெறும் வெள்ளிவிழா உள் அரங்கத்தில் சீரமைப்புப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து அரங்கத்துக்கு முன்பு தற்காலிகமாக மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தார் சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நவ.11-ம் தேதி நடக்கும் விழாக்களில் பங்கேற்றுவிட்டு மாலையில் விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாத்துரையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா அரங்குக்குச் செல்கிறார் என தெரிகிறது.
அதிகாரப்பூர்வ தகவல் இல்லை: ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கார் செல்லும் சாலைகளில் வேகத்தடைகள் அகற்றப்பட்டு சாலை சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. நிகழ்ச்சி நேரம் குறித்துஇதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் நேரடிப் பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன. திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். பிரதமரின் நிகழ்ச்சி குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் சிவக்குமார் தலைமையில் பேராசிரியர்கள் உள்ளிட்ட குழுவினர் ஆலோசனை நடத்தி ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர்.