

திருப்பூர்: ஊராட்சிப் பணிகளை செய்யவிடாமல் சிலர் மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம், கணபதிபாளையம் ஊராட்சித் தலைவர் புகார் மனு அளித்தார்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடந்தது. பல்வேறு பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
உடுமலை அருகே கணபதிபாளையம் ஊராட்சித் தலைவர் சிவக்குமார் அளித்த மனு: எனக்கு சிலர் மிரட்டல்கள் விடுக்கின்றனர். என் சமூகத்தை குறிப்பிட்டு, என்னை துன்புறுத்துவதோடு, எனது பணிகளை செய்யவிடாமல் தடுக்கின்றனர். துணைத்தலைவர் சுப்பிரமணியத்தின் மீதும், ஊராட்சி நிர்வாகத்தின் மீதும் வேண்டுமென்றே சிலர் வீண்பழி சுமத்துகின்றனர். ஊராட்சியில் முறைகேடுகள் நடந்ததாகக்கூறி, ஆதாரமற்ற புகார்களை முன்வைக்கின்றனர்.
ஊராட்சி உறுப்பினர்கள் சிலர், ஊராட்சிக்கு வரும் ஒப்பந்தப் பணிகளில் 10 சதவீதம் கமிஷன் தொகையை தங்களுக்கு பெற்றுத்தரும்படி வலியுறுத்தினர். அதற்கு நாங்கள் உடன்படாததால், எங்கள் மீது களங்கம் சுமத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் பூலுவபட்டி ஸ்ரீநகர் பொதுமக்கள் அளித்த மனு: பூலுவபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே மாகாளியம்மன் கோயிலும், அதனை சுற்றி காலி இடமும் உள்ளது. அந்த இடத்தில் ஒரு சிலர் வேலி அமைத்து, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை மட்டும் கோயிலில் வழிபாடு செய்ய அனுமதிக்கின்றனர். மற்ற சமூகத்தினரை அனுமதிப்பதில்லை. கோயிலை சுற்றி உள்ள இடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வேலியை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிறிஸ்தவர்கள் போராட்டம்: சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் இடம்வாங்கி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை தொடங்கினோம்.
ஒரு சிலர், கட்டுமானப் பணிகளை தடுத்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சபை கட்டுவதற்கு அனுமதிக்கக் கோரி கடந்த பல மாதங்களாக மாவட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும், உரிய நடவடிக்கை இல்லை. எனவே ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர். இதையடுத்து அனைவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து, நேற்றிரவு வரை தர்ணாவில் ஈடுபட்டனர்.