Published : 08 Nov 2022 07:18 AM
Last Updated : 08 Nov 2022 07:18 AM
சென்னை: சென்னை வானகரம் பகுதியில் கூவம் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை விட்ட 9 லாரிகளின் வாகன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, வானகரத்தில் நடேசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தால் இயக்கப்பட்ட டேங்கர்லாரிகள் மூலம் கூவம் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் சட்டவிரோதமாக வெளியேற்றப் பட்டது. அதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், அந்நிறுவன மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டநிர்வாகத்தால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டு, 9 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் போக்குவரத்து ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையருக்கு வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், நடேசன் டிரான்ஸ்போர்ட்டால் சரக்கு போக்குவரத்துக்கு மட்டும் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 9 டேங்கர்லாரிகளின் வாகன அனுமதியை மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி ரத்து செய்தார்.
எனவே, கழிவுநீர் டேங்கர் லாரிகளை கையாளுபவர்கள் குடியிருப்பு, வணிக வளாகங்களிலிருந்து சேகரிக்கும் கழிவுநீரை சென்னை குடிநீர் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட லாரிகள் மூலம் வெளியேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சட்ட விரோதமாக நீர் நிலைகள் மற்றும் காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும். பொதுமக்கள் சட்ட விரோதமாகச் செயல்படும் கழிவுநீர் டேங்கர் லாரிகள் பற்றியதகவலை அருகிலுள்ள தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்டஅலுவலகம் அல்லது தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாடு வாரிய உதவிஎண் 18004256750, மின்னஞ்சல் complaint@tnpcb.gov.in மற்றும்சென்னை குடிநீர் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும்சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT