Published : 16 Nov 2016 06:29 PM
Last Updated : 16 Nov 2016 06:29 PM

3 தொகுதி தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு ஜி.கே.மணி கடிதம்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலை ஒத்திவைக்கக் கோரி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதிக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ''இந்திய வரலாற்றிலேயே ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்காக முதன்முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டவை என்ற அவப்பெயரை பெற்றவை தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகள் தான். இம்முறையும் பணம் பெரிய அளவில் விநியோகிக்கப்படலாம் என்பதால் அதற்கேற்றவாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வந்தது.

இதுதொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கடந்த மாதம் 21-ம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.500 வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.2000 வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.1500-ம், திமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.500-ம் வழங்கப்பட்டன. திருப்பரங்குன்றம் தொகுதியிலும் இதே அளவில் பணம் வினியோகிக்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு இதுவரை வினியோகிக்கப்பட்ட ரூ.130 கோடியில் ரூ.120 கோடி மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்கள் ஆகும். இதன்மூலம் 3 தொகுதிகளிலும் தேர்தல் விதிகள் மட்டுமின்றி, கறுப்புப் பணத் தடுப்பு சட்ட விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன.

எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் 324-வது தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். இத்தொகுதிகளின் அதிமுக, திமுக சார்பில் ஓட்டுக்கு பணம் தரப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தி, அதனடிப்படையில் 3 தொகுதிகளிலும் போட்டியிட்ட அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்'' என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x