Published : 08 Nov 2022 07:10 AM
Last Updated : 08 Nov 2022 07:10 AM

‘தமிழகத்தின் நேரு மாமா’ குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா: அமைச்சர் ரகுபதி புகழாரம்

கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா குடும்பத்தார் இணைந்து நடத்திய குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கியப் பணி வெள்ளி விழா மலரை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டார். உடன் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை அருள், குழந்தைக் கவிஞர் பி.வெங்கட்ராமன், கல்கி இதழின் முன்னாள் ஆசிரியர் சீதா ரவி, இசைக் கலைஞர் டி.கே.எஸ்.கலைவாணன், அழ.வள்ளியப்பாவின் மகள் தேவி நாச்சியப்பன் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்.

சென்னை: தமிழகத்தின் நேரு மாமா என அழைக்கப்படுபவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி புகழாரம் சூட்டினார். அழ. வள்ளியப்பா இலக்கிய வட்டமும், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா குடும்பத்தாரும் இணைந்து நடத்திய அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

விழாவில் அழ.வள்ளியப்பாவின் மகன் வ.அழகப்பன் வரவேற்புரையாற்றினார். வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் செல்லகணபதி தலைமை வகித்தார்.

குழந்தைக் கவிஞராக இருப்பது வரம்: தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவை போற்ற வேண்டியது, பாராட்ட வேண்டியது, நினைவுகூர வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். கவிஞராக இருப்பது பெருமை. அதைவிட குழந்தைக் கவிஞராக இருப்பது வரம். குழந்தைகள் உலகம் என்பது அரிதாரம் பூசாத அன்பு நிறைந்த பூந்தோட்டம். அதை வண்டாக சுற்றிவந்து தேன் கவிதைகளை குழந்தைகள் நெஞ்சில் தெளித்தவர். அழகான பாடல்களுக்குச் சொந்தக்காரர், தமிழகத்தின் நேரு மாமா அழ.வள்ளியப்பா.

இன்றைக்கு பல குழந்தைகள் தொலைக்காட்சியே கதி என கிடக்கும் இந்த நேரத்தில் அழ.வள்ளியப்பாவை நினைவுகூர்வது முக்கியம். இந்தியன் வங்கியில் பணியாற்றியதுடன் தொடர்ந்து குழந்தைக் கவிதைகளையும் எழுதி வந்தார்.

எளிமை, இனிமை, தெளிவு: 1944-ம் ஆண்டு முதல் குழந்தை இலக்கிய பாடல் தொகுதியான மலரும் உள்ளம் வெளிவந்தது. அதன் பின்னர் தனது வாழ்நாள் முழுவதையும் குழந்தை இலக்கியத்துக்கு அர்ப்பணித்தார். குழந்தைப் பாடல் எளிமை, இனிமை, தெளிவு ஆகிய பண்புகளை தன்னகத்தே கொண்டது. வள்ளியப்பாவின் பாடல்களில் இந்த 3 பண்புகளும் அடங்கி இருந்தன. இவ்வாறு ரகுபதி கூறினார். நிகழ்ச்சியில், பழனியப்பா பிரதர்ஸின் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கியப் பணி வெள்ளி விழா மலர், முனைவர் தேவி நாச்சியப்பன் எழுதிய குழந்தைகள் உலகம், டி.மோகனம்பாள் தயாரித்த சிறுவர்களுக்கான இசை இலக்கணம் பாடல்கள் ஆகியவை வெளியிடப்பட்டன.

விழாவில், செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை அருள், குழந்தைக் கவிஞர் பி.வெங்கட்ராமன், கல்கி இதழின் முன்னாள் ஆசிரியர் சீதா ரவி, இசைக் கலைஞர் டி.கே.எஸ். கலைவாணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர் அழ.வள்ளியப்பாவின் மகள்கள் தேவி நாச்சியப்பன் தொகுப்புரையும், உமையாள் வள்ளியப்பன் நன்றியுரையும் ஆற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x