Published : 08 Nov 2022 07:29 AM
Last Updated : 08 Nov 2022 07:29 AM
திருவள்ளூர்: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலின் 42.991 கிலோ நகைகளை சுத்த தங்கமாக மாற்றி முதலீடு செய்ய, அவற்றை பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளரிடம் நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒப்படைத்தார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பல மாற்று பொன் இனங்களில், கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சுத்த தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டம் கடந்த ஆண்டு அக். 13-ம் தேதி தமிழக முதல்வரால், காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலின் 130.512 கிலோ எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பல மாற்று பொன் இனங்கள் ஏற்கெனவே பாரத பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பிரித்தெடுக்கப்பட்ட பல மாற்று பொன் இனங்களை சுத்த தங்கமாக மாற்றி முதலீடு செய்ய பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, 42.991 கிலோ எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை பாரத பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, தேவி கருமாரியம்மன் கோயிலில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பங்கேற்றார்.
இந்நிகழ்வுகளில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு, அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) இரா.கண்ணன், அறநிலையத் துறை வேலூர் மண்டல இணை ஆணையர் லட்சுமணன், திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் துணை ஆணையர் ஜெயப்பிரியா, அறங்காவலர் குழு தலைவர் என்.கே.மூர்த்தி, திருவேற்காடு நகராட்சி தலைவர் என்.இ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT