Published : 08 Nov 2022 06:20 AM
Last Updated : 08 Nov 2022 06:20 AM
சென்னை: கரோனா பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு, அரசுப் பணிக்கான எம்ஆர்பி தேர்வில் ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர்கள், செவிலியர்கள், 889 மருந்தாளுநர்கள், டெக்னீஷியன்கள் உட்பட 4,308 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 889 மருந்தாளுநர்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆர்பி கடந்த அக்.11-ம் தேதி வெளியிட்டது. எம்பிபிஎஸ் படித்து முடித்த ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கணினிவழி எழுத்து தேர்வை நடத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், கரோனா பேரிடர்காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு எம்ஆர்பி தேர்வில் ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க பொதுச் செயலாளர் எம்.அகிலன் கூறியபோது, “கரோனா பேரிடரின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகளாக பணியாற்றினர். அவர்களது சேவை கட்டாயம் அங்கீகரிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி அளித்திருந்தார். எனவே, கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு எம்ஆர்பி தேர்வில் ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT