Published : 08 Nov 2022 06:18 AM
Last Updated : 08 Nov 2022 06:18 AM
புதுச்சேரி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து புதுச்சேரி பொது சுகாதார செவிலியர் அதிகாரி வி.சரஸ்வதி, 2021-ம்ஆண்டுக்கான ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருதினை பெற்றுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று, சிறப்பாக சேவையாற்றிய செவிலியர்களுக்கு விருதளிக்கும் நிகழ்ச்சிநடந்தது. இந்நிகழ்வில் குடியரசுத் தலைவா் திரவுபதி முர்மு,2021-ம் ஆண்டுக்கான ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருதினைநாடு முழுவதும் சிறப்பாக சேவையாற்றிய செவிலியர்களுக்கு வழங்கினார்.
இதில், புதுச்சேரி சுகாதாரத் துறையின் துணை இயக்குநரக அலுவலகத்தில் பொது சுகாதார செவிலியராகப் பணிபுரியும் வி.சரஸ்வதி, 2021-ம் ஆண்டுக்கான ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் விருதைப் பெற்றார். இவர், கடந்த 1987-ல் அரசுசெவிலியராக தனது பணியைத்தொடங்கினார். 11 ஆண்டுகளாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஐசியூ, டயாலிசிஸ் யூனிட்டில் பணிபுரிந்தார். அதைத்தொடர்ந்து 9 ஆண்டுகள் நர்சிங் கல்லூரியில் பணிபுரிந்த இவர், தொடர்ந்து 15 ஆண்டுகளாக மாஹே உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார்.
விருது பெற்ற சரஸ்வதி, பேரிடர் மேலாண்மை பயிற்சியை டெல்லியில் முடித்துள்ளார். பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் இளம்பருவத்தினருக்கு கலந்தாய்வு நடத்தியது, நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய சுயகவனிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை பயிற்சி அளித்ததுடன், அதுதொடர்பான வீடியோ தயாரித்தது, தேசிய சுகாதாரத் திட்டங்களை குழுவாக செயல்படுத்தியது, கள சுகாதார நடவடிக்கைகளை வழிகாட்டியது மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான ஆஷா பணியாளர்களுக்கு பயிற்சிகளை நடத்தியது ஆகிய சேவைகளை செய்துள்ளார். மேலும், ஆஷா பணியாளர்களின் குறை தீர்க்கும் குழுவில் உறுப்பினராக இருந்தது, கரோனா தொற்று நோய்களில் பணியாற்ற ஆஷா கள பணியாளர்களை தயார்செய்தது, கரோனா தொற்று நோய்களின் போது வீட்டிலேயே கணக்கெடுப்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளை பின் தொடர ஆஷாபணியாளர்களுக்கு பயிற்சி திட்டம் தயாரித்து உதவியது போன்ற பணிகளுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT