

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மைய அதிகாரி கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து வருகிறது.
அதன் விளைவாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறித்து அடுத்த 24 மணி நேரத்துக்கு பிறகே கணிக்க முடியும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.