

ஐஎஸ்ஓ, ஐஎஸ்ஐ ஆகிய தரச்சான்றுகளுக்கு இடையேயான வேறுபாட்டை பொதுமக்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என தர நிர்ணய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தரச்சான்று வழங்கும் நிறுவனங் களை மதிப்பீடு செய்யும் தேசிய அமைப்பு (என்ஏபிசிபி), நுகர்வோர் ஒருங்கிணைப்பு கவுன்சில் (சிசிசி) மற்றும் கன்சியூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து பொருட்களின் தரம் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கத்தை சென்னையில் நேற்று நடத்தின. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற என்ஏபிசிபி-யின் இயக்குநர் சசி ரேகா, அதிகாரி எஸ்.ரவி சங்கர் ஆகியோர் பேசியதாவது:
பொதுமக்கள் பலர் ஐஎஸ்ஐ முத்திரைக்கும், ஐஎஸ்ஓ தரச் சான்றுக்கும் வேறுபாடு தெரியாமல் உள்ளனர். மத்திய அரசின் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) இந்தியாவிலுள்ள பொருட்களை தர நிர்ணயம் செய்து ஐஎஸ்ஐ சான்று வழங்குகிறது. இதில் பாதுகாப்பு, அதிகபட்ச நுகர்வு, உடல்நலன் சார்ந்த பொருட்களான சிமெண்ட், மின் கம்பங்கள், பால்பவுடர், காஸ் சிலிண்டர், கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் உள்ளிட்ட 110 பொருட்களுக்கு தரச் சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த 110 பொருள்களையும் இந்திய தர நிர்ணய அமைவனம் வழங்கும் ஐஎஸ்ஐ முத்திரையைப் பெற்றுத்தான் விற்க முடியும்.
ஆனால், ஐஎஸ்ஓ என்பது ஒரு நிறுவனத்தின் தர நிர்வாக முறைக்காக அளிக்கப்படுவது. எனவே, அந்த நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தை ஐஎஸ்ஓ முத்திரை உறுதி செய்யாது. ஆனால், சில நிறுவனங்கள் ஐஎஸ்ஓ முத்திரையை மட்டும் லேபிளில் குறிப்பிடுகின்றனர். எனவே, பொருட்களை வாங்கும்போது ஐஎஸ்ஐ முத்திரையை பார்த்து நுகர்வோர் வாங்குவது நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் கன்சியூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் நிர்மலா தேசிகன், நுகர்வோர் ஒருங்கிணைப்பு கவுன்சில் (சிசிசி) தலைவர் ராம்ஜிபாய் மவானி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.எம்.சுவாமிநாதன், இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) விஞ்ஞானி வி.அவினாஷ் பாபு, கன்சர்ட் அமைப்பின் இயக்குநர் சந்தானராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.