

புகழ்பெற்ற கர்னாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் சிறந்த கர்னாடக இசைக் கலைஞர்களுக்கு விருது கள் வழங்கப்பட்டு வருகின்றன. ‘தி இந்து’ மற்றும் சரிகம இணைந்து ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது 2016’-க்கு ஏற்பாடு செய்தன. இதற் காக சென்னை, கொச்சி, பெங்க ளூரு, ஹைதராபாத், மும்பை உள் ளிட்ட இடங்களில் மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையிலும், கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கொச்சியிலும், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவிலும், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந் தவர்கள் ஹைதராபாத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மும்பையிலும் என மொத்தம் 125 பேர் போட்டியில் கலந்துகொண்டனர்.
கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய மண்டலங்களில் இருந்து தலா 5 பேரும், சென்னையில் இருந்து 6 பேரும் மண்டல அளவிலான இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர். மண்டல அளவிலான இறுதிப் போட்டிகளில் சென்னையில் ஆர்.கார்த்திக், ஹைதராபாத்தில் தேஜாஸ் மல்லேலா, மும்பை யில் தாரிணி வீரராகவன், கேரளாவில் கே.எஸ்.ஹரிசங்கர், பெங்களூருவில் ஸ்ரீராம் சாஸ்திரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான இறுதிப் போட்டி சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று முன்தினம் நடந்தது.
காரைக்குடி மணி, ஓ.எஸ்.அருண், ஸ்ரீமதி, எஸ்.ராஜேஸ்வரி, ராஜ்குமார் பாரதி, டாக்டர் கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியின்போது ஸ்ரீனிவாச ராவ் வயலினும், பிரசாத் மிருதங்கமும், ரமணி கடமும் வாசித்தனர். போட்டியைக் காண நூற்றுக்கணக்கான பொது மக்களும், கர்னாடக இசை ஆர்வலர்களும் திரண்டிருந்தனர்.
மும்பை மண்டலத்தில் இருந்து தேர்வான தாரிணி வீரராகவன், ஹைதராபாத்தில் இருந்து தேர்வான தேஜாஸ் மல்லேலா இருவரும் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது 2016’-க்கான போட்டியில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
தாரிணி வீரராகவன், தேஜாஸ் மல்லேலாவுக்கு ‘எம்.எஸ்.சுப்பு லட்சுமி 2016-க்கான சிறந்த குரல்’ என்ற பட்டமும் கேடயமும் வழங்கப் பட்டன. சரிகம சார்பில் அவர்கள் இலவசமாக இசை ஆல்பம் செய்துகொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. இறுதிப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.