Published : 10 Nov 2016 09:13 AM
Last Updated : 10 Nov 2016 09:13 AM

அதிபராக டிரம்ப் தேர்வு: இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்புறவு தொடரும்- சென்னையில் துணைத் தூதர் பிலிப் ஏ.மின் உறுதி

இனிவரும் காலங்களிலும் இந்திய - அமெரிக்க நட்புறவு தொடரும் என சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் பிலிப் ஏ.மின் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையொட்டி சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிபர் தேர்தல் குறித்து தூதரக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும், அமெரிக்க அதிபர்கள் குறித்த வினாடி - வினா போட்டியும் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி குறித்து நிருபர்களிடம் அமெரிக்க துணைத் தூதர் பிலிப் ஏ.மின் கூறியதாவது:

இந்தியா - அமெரிக்கா நட்புறவுக்கு தற்போதைய அதிபர் ஒபாமாவும், இந்தியப் பிரதமர் மோடியும் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். இந்த உறவு இனிவரும் காலங்களிலும் தொடரும்.

கொள்கை முடிவுகள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஜனவரி மாதம் வரை தற்போதைய அதிபர் பதவியில் நீடிப்பார் என்பதால், புதிதாக பொறுப்பேற்க உள்ள அதிபர்தான் அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தூதரக விசா பிரிவு தலைமை அதிகாரி சார்லஸ் லூமா ஓவர்ஸ்ட்ரீட், பொது விவகாரத்துறை அதிகாரி ஏரியல் எச்.பொல்லாக், தகவல் அதிகாரி அலெக்சியஸ் உல்ஃப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாதிரி வாக்குப்பதிவு

முன்னதாக, சென்னையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற அதிபர் தேர்தல் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 338 பேர் வாக்களித்தனர். பின்னர், நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஹிலாரிக்கு 280 பேரும், டிரம்புக்கு 57 பேரும் வாக்களித்திருந்தனர். ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x