புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: பிரகாஷ் ஜவடேகரிடம் திமுக மனு

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: பிரகாஷ் ஜவடேகரிடம் திமுக மனு
Updated on
1 min read

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக புதிய கல்வி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் திமுக மனு அளித்துள்ளது.

திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

''2009 கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசிய கல்விக் கொள்கை 2016 அமைந்துள்ளது. 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பது 5-ம் வகுப்பு வரை என குறைக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்புக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு முறை தோல்வி அடைந்தால் படிப்பை தொடர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது பாரம்பரியமான குலக் கல்வி முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியாகும். 1953-ல் ராஜாஜி அறிமுகப்படுத்திய படிக்கும்போதே பெற்றோரின் தொழிலையும் கற்றுக் கொள்ளும் கல்வித் திட்டத்தை புதிய கல்விக் கொள்கை நினைவுபடுத்துகிறது.

பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதத்தை கற்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை தமிழகம் பின்பற்றி வருகிறது. எனவே, சமஸ்கிருதம் திணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

10-ம் வகுப்பு இரண்டு வகையான தேர்வு நடத்தப்படும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இது மாணவர்களை பிளவுபடுத்தும் முயற்சியாகும். இதன் மூலம் எஸ்.சி., எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்கள் மேல் படிப்புக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

பள்ளிகள் பற்றிய விவரங்களோடு வரைபடங்களை தயாரிக்க வேண்டும் என்பது பள்ளிகளை தனியார் மயமாக்கும் முயற்சியாகும். கல்வி ஆணையம், இந்திய கல்வி சேவை ஆகிவற்றை உருவாக்குவதன் மூலம் கல்வியில் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு குறித்து ஒரு வார்த்தைகூட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான அபாயம் நெருங்கி வருகிறது என்பதையே இது காட்டுகிறது.

கல்வித் துறையில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்தால் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) ஏஐசிடிஇ, என்சிடிஇ போன்ற அமைப்புகள் தேவையற்றதாகிவிடும். இதன் மூலம் உயர் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி உரிமைச் சட்டம் விரிவுப்படுத்தப்படும் என்பது சிறுபான்மையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்தி ஆசிரியர்களை மதிப்பீடு செய்வது அவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் பல்வேறு தரப்பு மக்களிடம் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய கல்விக் கொள்கையை திமுக உறுதியுடன் எதிர்க்கிறது'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in