

சென்னை: பொதுமக்கள் தங்களது பகுதியில் நிகழும் வானிலை தொடர்பான தகவல்களை வானிலை ஆய்வு மையத்திற்கு தெரிவிக்கும் வசதியை இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும் நடக்கும் வானிலை நிகழ்வுகளை இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து மண்டல அளவில் உள்ள வானிலை ஆய்வு மையங்களுக்கு வழங்கி வழங்கும். மாநிலம் வாரியான வானிலை முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கும். இந்த தகல்களை மாவட்ட வாரியாக பிரித்து மண்டல வானிலை ஆய்வு மையங்கள் வழங்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வரை அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கி வருகிறது.
ஆனால், காலநிலை மாற்றம் காரணமாக கணிக்க முடியாத அளவு மழை பெய்து வருகிறது. குறிப்பாக, குறுகிய நேரத்தில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வானிலை தொடர்பான தரவுகளை மேம்படுத்த பொதுமக்களின் பங்களிப்பை பெற இந்திய வானிலை ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடக்கும் வானிலை தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கான இணையதளம் தற்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி பொதுமக்கள் https://city.imd.gov.in/citywx/crowd/enter_th_datag.php என்ற இணையதளத்தில் தங்களது ஊரில் நிகழும் வானிலை தகவல்களை பதிவிடலாம். இதில் மாவட்டத்தின் பெயர், வானிலை நிகழ்வு நடந்த நேரம், நிகழ்வுகளின் வகை, அதனால் ஏற்பட்ட சேதம், உங்களின் கருத்து மற்றும் புகைப்படம் ஆகிவற்றை பதிவு செய்யலாம். பொதுமக்கள் அளிக்கும் தகவல்களை வானிலை தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்த உதவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.