Published : 07 Nov 2022 03:12 PM
Last Updated : 07 Nov 2022 03:12 PM

“10% இட ஒதுக்கீடு தீர்ப்பு... சரித்திரப் புகழ் வாய்ந்தது” - அண்ணாமலை வரவேற்பு

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "பொருளாதார அடிப்படையில் பின்தங்கி கஷ்டபடுகிறவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. இதனால் யாருக்கும் எங்கேயும் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் .

சென்னையில் பிரதமர் மோடி குறித்த புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: "பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பாரத பிரதமர் கொண்டு வந்திருக்கிற இந்த 10 சதவீத உள் ஒதுக்கீடு நிச்சயமாக செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பாஜக மனதார வரவேற்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் போகும். மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சட்டநாதன் கமிஷனை கொண்டு வந்தபோது, திமுக விஷமத்தனமான பிரச்சாரம் செய்தது. அதேபோல், 2002-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை சட்டமன்றத்தில் 140 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு சட்டமானது. அதை எதிர்த்தும் விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப்பட்டது.

இன்றைக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு வந்தால், ஏற்கெனவே இட ஒதுக்கீடு சலுகை பெறுபவர்களுக்கு எல்லாம் பாதிப்பு, குறிப்பாக ஓபிசி பிரிவில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பாதிப்பு என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், அதுபோல எதுவுமே கிடையாது.

மத்திய அரசு யார் யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு சலுகை ஏற்கெனவே வழங்கியிருக்கிறார்களோ, அவர்களுடைய உரிமைகள் எதுவும் இந்த தீர்ப்பால் பறிபோகாது. தமிழகத்தைப் பொறுத்தவரை பி.சி., எம்.பி.சி., உள்ஒதுக்கீடு நிலையாக மாறாமல் அப்படியே இருக்கும். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல், எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கான உள்ஒதுக்கீட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இதை காலம் காலமாக சொல்லி வந்தாலும், இதனை எதிர்த்து தமிழகத்தில் திமுக ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தை கையிலெடுத்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டனர்.

பொருளாதார அடிப்படையில் பின்தங்கி கஷ்டபடுகிறவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இதனை கொண்டு வந்துள்ளது. இதற்கு பல வரையறைகளையும் மத்திய அரசு விதித்துள்ளது. இதனால் யாருக்கும் எங்கேயும் பாதிப்பு கிடையாது. உச்ச நீதிமன்றம் சரித்தரப் புகழ் வாய்ந்த இந்த தீர்ப்பின் மூலம் அதை அங்கீகரித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x